அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!
"யார் கண்டுபிடித்தது? யார் சொல்லியது? யார் பேச்சைக்கேட்டுப் பின்பற்றுகிறார்கள்?" என்று தான் தெரியவில்லை. புதிது புதிதாக எதையாவது தூக்கிக்கொண்டுத்திரிகிறார்கள். "ஏன்? எதற்கு? என்ற சொற்கள் எல்லாம் தடைசெய்யப்பட்டுவிட்டதா?" என்றெல்லாம் கூட யோசிக்கத் தோன்றுகிறது. என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், எல்லாவற்றையும் செய்யும் ஒரு அடிமைக்கூட்டமாய் பெரும்பான்மை சமூகம் எப்படி இருக்க முடியும்? முடிகிறது. கண்ணெதிரே உயிருள்ள ஜடமாய் ஆறறிவு மனிதனென பெருமைப்பீற்றிக் கொண்டே நடமாடிக்கொண்டிகிறது. கடவுள் விடயத்தில் கேள்வி கேட்டால் மனம் புண்படுகிறது என்று ஒரே போடாய் போட்டுவிடுகிறார்கள். மறுகேள்விக்கு மனம் வராது. போய்த்தொலைகிறது அவரவர் நம்பிக்கை என்று விட்டால், இன்று எல்லாவற்றிற்கும் அதையே தூக்கிகொண்டு வருகிறார்கள்.
ஆங்கிலப்புத்தாண்டு என்ற ஒன்று வருகிறது. ஒரே பரபரப்பு. பட்டையும் கொட்டையுமாய் ஒரு கூட்டம். பாட்டிலும், ஆடலும், பாடலுமாய் ஒரு கூட்டம். அவரவர் இஷ்டம். குறையொன்றுமில்லை. இதோ, இன்று தமிழ்ப்புத்தாண்டு. ஆங்கிலப்புத்தாண்டு போல் அவரவர் விருப்பத்திற்கு கொண்டாட முடியுமா? புத்தாண்டுக்கும், கடவுளுக்கும், கழிசடை மக்களுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் எல்லாவற்றையும் புரூட் மிக்சர் கணக்காக ஒன்றாக்கி குழப்பி அடிக்கிறார்கள். தமிழ்ப்புத்தாண்டு அன்று ஆங்கிலப்பத்தாண்டுக்கு சபதம் எடுப்பது போல் யாராவது எடுக்கிறார்களா? இல்லை தானே? தமிழ்தேசியக்காரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல! நியாயப்படி இதற்கொரு போராட்டம் நடத்தவேண்டும். விட்டுத்தள்ளுங்கள் விஷயத்திற்கு வருவோம்.
புத்தாண்டு அன்று சைவம் தான் உண்ண வேண்டும் என பொது சமூவம் நம்புவது ஏன்? அதே ஆட்டுமந்தை சமூவம் என்னைப்போன்ற அசைவைப்பிராணிகளை இதன் மூலம் மறைமுகமாக புண்படுத்துவது எதனால்? ஜீவகாருண்யவாதிகளை விட்டுவிடுவோம். அது அவர்கள் தேர்ந்தெடுத்த வழி. பிறருக்கு இடைஞ்சல் இல்லாதது. இந்த செலக்டிவ் நாள்கள், மாதங்களில் மட்டும் ஜீவகாருண்யத்தைக் கடைபிடிப்பவர்களைக் கண்டால் தான் குமட்டிக்கொண்டு வருகிறது. இதோ இன்றும் கிளம்பிவிட்டார்கள். நல்ல நாள் அதுவுமா கோழிக்கறி கேட்கிறான் என அவதூறு பாட. தமிழ்ப்புத்தாண்டு அன்று கோழிக்கறி கேட்டது ஒரு குற்றமா? கோழியை சாப்பிட எதற்கடா நாளும் கோளும். நாவிருக்கிறது ருசிக்க, வாயிருக்கிறது புசிக்க. பல்லிருக்கிறது கடிக்க. இதில் நாளுக்கு இன்றென்ன கேடாம்? யாரிடமும் பதிலில்லை. ஆனால் உண்பதற்கு தடா போட்டுவிட்டார்கள். கோழிக்கறிக்கு தான் தடா, மற்றபடி அது இட்ட முட்டைக்கில்லை தடா. அதுவரையில் நிம்மதி. விநோதம் தான்.
ஆனாலும் இதையெல்லாம் தட்டிக்கேட்கத்தான் ஒரு நாதியில்லை. சிக்கன் பிரியர்களின் கூவல், சபையேறுவதேயில்லை. ஊரில் எந்தப்பிரச்சனை என்றாலும், என் அன்புக்குரிய கோழியாரைத்தான் அடிக்கிறார்கள். அது புத்தாண்டு என்ற பெயரிலும் தொடர்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தேசம் என் கையில் கிடைக்கட்டும், பிறகிருக்கிறதடா உங்களுக்கெல்லாம்.
Unaku pudichatha ne sei. No logic 👎 behind not to eat non-veg on festival days. Kadavul kea kedai vetranga
ReplyDelete