2023−ல் என்ன கழட்டினேன் மற்றும் 2024-ல் என்ன கழட்டப்போகிறேன்!!!

எல்லா வருடமும் குறிப்பிட்டுச் சொல்ல சில சாதனைகளோ, துன்பியல் நிகழ்வுகளோ ஏதாவது ஒன்றாவது மெமரி குடோனில் இருக்கும். ஆனால், இந்த 2023−ஆம் ஆண்டுதான் எந்தவித பேரின்பமும், பெருந்துன்பமும் தராமல் தன்னளவில் வந்தான் போனான் வகையறாவாகவே  அமைந்தது. பொட்டிப்படுக்கையை மிகக்குறைவாகவே கையில் சுருட்டிக்கொண்டு பயணம் கிளம்பியிருக்கிறேன். ஜி அளவுக்கு பயணமெல்லாம் நமக்கு ஆண்டுதோறும் அமைந்ததில்லை,அமைவதுமில்லை,அமையப்போவதும் இல்லை. 2023−ல் செய்த முக்கியப் பயணமென்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக குவைத் சென்று வந்தது மட்டும் தான் தேறும். அதுவும் வேலை நிமித்தமாகத்தான். இருந்தாலும் கடந்த ஆண்டைப்போல் இல்லாமல் இந்த ஆண்டு குறைந்தபட்சம் குவைத்தைச் சுற்றிப்பார்க்க முடிந்தது பேராச்சரியம். பஞ்சதந்திரம் கமல் கேங் போல நல்ல நண்பர் வட்டம் அமைந்தது. நிமிடந்தோரும் சிரிப்புமழை. வாயைத் திறந்தாலே, மூடிட்டு இருடா ல** என பங்கமாய் கலாய்த்துத் தள்ளிவிட்டார்கள். கூட்டாகச் செய்த பெயர் சூட்டும் சம்பவங்கள் தான் மிகக்கொடூரம். நூடுல்சிற்கு மண்புழு என்று பெயர் வைத்ததாகட்டும், தலைக்கவசத்திற்கு மண்டையோடு என்று பெயர்சூட்டியதாகட்டும்,தக்காளி எப்படிடா இப்படியெல்லாம் என சின்னிஜெயந்த் போல சிரித்து மாளவில்லை. பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள். மனநலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத மக்கள். குவைத்தில் இருந்த முப்பது நாட்களில் இரண்டு முறை தியேட்டர் பக்கம் படம் பார்க்க சென்று வந்தோம். ஓமானில் நான்கு வருடம் இருந்து நான்கே முறை தான் தியேட்டர் பக்கம் தலை வைத்துப்படுத்திருக்கிறேன். அந்த அளவுக்கு வேலையோ வேலை.
தலைநகரம் படத்தில் பாலக் லால்வானியின் பிகினி சீன் இருக்கும் என்று அடித்துப்பிடித்து வேலை நெருக்கடிக்கிடையில் பார்க்கச்சென்று குவைத் அடிப்படைவாத சென்சார் போர்டு அதை கட் செய்து வெளியிட்டிருந்தபடியால் பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பி வந்து அந்த சோகத்தை இன்ஸ்டா ரீலில் அதே சீனைப் பார்த்துப் போக்கிக்கொண்டது என ஏகப்பட்ட சேட்டை. குவைத் பயணம் மனநிறைவாகவே அமைந்தது.

வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டம், சொர்க்கம் போல இருந்த ஓமான் வேலையை விட்டு ஒதுங்கும் நிலை. ஈராக்கில் இருந்து ஒரு நல்ல ஆஃபர். பிச்சுமணிக்கு திடீரென அடித்த அரசாங்க உத்தியோக ஆஃபர் போல, சரவணனுக்கு ஒன்று. எப்படிப் பார்த்தாலும் ஓமானைக்காட்டிலும் நல்ல ஊதியம். கூடவே மூன்று மாதத்திற்கு ஒரு மாதம் விடுமுறை வேறு. ஆனால் விடுமுறைக்கு ஊதியம் இல்லை. நிலவில் களங்கம் போல மன்னித்துவிடலாம். எப்படிப்பார்த்தாலும் நல்ல சம்பளம் தான். ஆனால், வேலைக்கு உத்திரவாதம் கிடையாது. பாரினில் உறங்கி எழுவதற்கே உத்திரவாதம் இல்லை, இதில் வேலை என்ன பெரிய பொடலங்காய். எவ்வளவு நாள் தான் அதே சம்பளத்தில் பாதுகாப்பாக இருப்பது, ஒரு முயற்சி எடுத்துப்பார்ப்போமே என்று ஈராக்கிற்கு புறப்பட்டுவிட்டேன். இதோ இப்பொழுது ஈராக்கில் இருந்து தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன்.   இந்த வேலை மாற்றம் குறித்துப்பேச நிறைய இருக்கிறது. அதைத் தனியாகப்பேசுவோம்.

போலவே இந்த ஆண்டு தான் நீண்ட நாள் விடுமுறை எடுத்தேன். பழைய விடுமுறைக்கணக்கை எல்லாம் சேர்த்து ஏறக்குறைய 45நாட்கள். ரெஸ்டோ ரெஸ்ட். வீட்டு வேலைகள் சிலவற்றை செய்ய முடிந்தது. அப்பா,அம்மாவுக்கு ஒத்தாசையாக இருக்க முடிந்தது.

பெருங்கொண்டாட்டமான பொங்கலும், சமைத்தவுடன் எடுத்து சுவைக்கும் உரிமை தரும் தீபாவளியும் இந்த ஆண்டும் இல்லை. வெளிநாட்டு வேலை என்று வந்துவிட்ட பின் எல்லாவற்றையும் மறந்தாகிவிட்டது. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு கிச்சுகிச்சு இருந்தபடியே இருக்கிறது.

வருடாவருடம் ஜி பெத்துப்போடும் நயா ஹிந்தியாப்போல, எதையாவது சபதமெடுப்பது வழக்கம். அதை முழுவதுமாக முடிக்காவிட்டாலும், முக்கால் கிணறு தாண்டிவிட்டிருப்பேன். நூறு லட்சியம், பாஸ் மார்க் நிச்சயம் என்பது போல பெயிலாகாமல் பாஸாகியிருப்பேன். இந்த ஆண்டு சபதம் என ஒன்றையும் எடுக்கவில்லை. அதுவே அடியேன் செய்த பெரும் பிழை. 2023ஆம் ஆண்டைப்போல் இல்லாமல் இந்த ஆண்டு உடல்நலத்தின் மேல்கடும் கவனம் செலுத்த உத்தேசித்துள்ளேன். அதற்காக பின்வரும் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்த இருக்கிறேன்.

1.சர்க்கரையை முழுமையாக நிறுத்துவது. வேண்டுமென்றால் தேன் மட்டும் சேர்த்துக்கொள்வது.
2.புயலோ,மழையோ,வெயிலோ,குளிரோ, நாள்தோறும் பத்தாயிரம் அடிகளுக்குக்குறையாமல் நடப்பது.
3.காஃபி,டீயை நிறுத்துவது.
4.இனிப்புப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவது,ஸ்டிரிக்ட்லி நோ ச்சுவீட்ஸ். வேண்டுமென்றால் சர்க்கரைக் குறைவான பிஸ்கட்டுகள் மட்டும் சேர்த்துக்கொள்வது. மேலும் இனிப்பு வெறி ஏறினால், பனங்கற்கண்டை மரபுவழி மக்கள் போல் கையில் எடுப்பது.
5.தினசரி உண்ணும் மற்றும் எரிக்கும் கலோரிக் கணக்கினை குறித்து வைப்பது.
6.30 புஷ் அப்ஸ் மினிமம் தினசரி எடுப்பது.
7. சேமிப்பினை உயர்த்துவது.
8.மாதம் ஒரு புத்தகம் படிப்பது.

எட்டே அதிகமாகத் தெரிகிறது. இவற்றை செவ்வனே செய்தாலே பெரிய மனதிருப்தி உண்டாகும். வருட இறுதியில் இவற்றை சீர்தூக்கிப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு உங்களுக்கும் நல்லாண்டாக அமைய சரவணனின் அன்பு வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!