அறுபதிலும் வைராக்கியம்..!

சிலப் பிறவிகளைப் பார்த்தாலே பதறி அடித்து ஓட்டமெடுக்க வேண்டியுள்ளது. காரணம் வேறென்ன பணப் பைத்தியங்கள். அவர்கள் எது செய்தாலும் அதன் முடிவில் பணமே பிரதான நோக்கமாகயிருக்கிறது.சாப்பிட்டால் அதிகம் செலவாகிவிடும் என சாப்பிடாமல் கூட பணம் சேர்க்கும் புண்ணியாத்மாக்கள்.அவர்களைப் பற்றி இங்கேப் பேசப் போவதில்லை.அதற்கு நேர் எதிராய் சிலர் வைராக்கியத்திற்காக அண்ணா மலை ரஜினி கணக்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைப் பற்றித்தான் இங்கு பகிர இருக்கிறேன்.

அவர் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்தார். பார்க்க கூலியாள் போல் இல்லை, சற்று மிடுக்காகவே இருந்தார். பணிவாகவே பதிலளித்தார். வீட்டில் சண்டை என்றும் . மருமகள் வயசான காலத்தில் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லை என்று திட்டி விட்டதாகவும், கோபத்தில் வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும், வேலையும் தங்கும் இடமும் கொடுத்தால்போதுமென்றும் கூறினார். சில பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு வேலைக்கு அமர்த்தப் பட்டார்.

காலை நான்கு மணி கோழியார் கூவுவதற்க்கு முன்பே அவர் துயில் எழுவார். இரண்டு டம்ளர் நீர் அருந்திவிட்டுவேலைக்கு அமர்ந்தால் 7 மணி வரை நான் ஸ்டாப்பாக வேலை தான். பின்பு டீ சாப்பிட, காலைக்கடன்களுக்கு சுமார் அரை மணி நேரம் எடுத்துக்கொள்வார். சரியாக 7.40 க்கு மீண்டும் ஆரம்பித்தால் 12 மணி வரை வேலை. இடையில் இயற்கை அழைப்பைத் தவிர மற்றவற்றிற்கு செவிமடுப்பதில்லை. மதிய உணவுக்கு 30 ரூபாயில் ஒரு புல் மீல்ஸ் வாங்கி வந்துவிடுவார். அதில் சாம்பார் ,சாதம் மற்றும் ரசத்தை சரி பாதியாகப் பிரித்து இரவுக்கு ஒதுக்கிவிடுவார். மீண்டும் வேலை ஆரம்பமாகிவிடும்.அறுபதைத்தொட்டக் கிழம் தான் ஆனாலும் வேலையைத் தொய்வின்றித் துளி சோர்வின்றி செய்ய முடிந்ததை எண்ணி வியப்பேன். மாலையில் குளியல் பின் மீண்டும் ஒரு கப் சாய். மீதம் வைத்த உணவு இரவுக்கு.ஒன்பது மணிக்கு வண்டி குடைசாயும். சாய்வதற்கு முன்னர் அன்றைய நாளின் கணக்கு வழக்கு. ஐம்பதை மிகாமல்பார்த்துக்கொள்வார். மழையோ,குளிரோ, வெயிலோ இந்த சக்கரவாழ்வுக்கு மாறுதல்இல்லை. குளிக்கின்ற நேரம் மட்டுமே மாறுபடும். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுப்பார், அதுவும் ஆறு மணி நேரம் மட்டும்.

அப்படி எங்கு செல்கிறார் என்று விசாரித்ததில் இப்படி மிச்சப் படுத்தும் பணத்தைமாத வட்டிக்கு விடுகிறார் என்றும், அதன் வட்டிப் பணத்தை வசூலிக்கவே செல்கிறார் என்றும் தகவல் கிடைத்தது.  இப்படியாக ஆறு மாதங்கள் கழிந்தது.காலம் எப்பேர் பட்ட காயத்தையும் ஆற்றிவிடும் வல்லமை வாய்ந்தது. மகன் வந்துவிட்டுப் போனார், மருமகள் போனில் பேசினாள். இரண்டுக்கு நான்கு சொட்டு கண்ணீர் விட்டதாகக் கேள்வி. பேரக்குழந்தைகள் அழுவதாகவும் கூற வைராக்கியம் வடிந்தது. வர ஒன்னாந்தேதி கிளம்புறேன் என ஆனந்தமாகக் கூறினார். ஆறு மாத உழைப்பில் பெருசு சேமித்தது. ஐம்பதாயிரம்.மிக அதிகம்.நாள் ஒன்றுக்கு சுமார் 400 ரூபாய்களை சேமித்திருக்கிறார்.6 மாதங்களில் செலவழித்தத் தொகை சுமார் பத்தாயிரத்துக்கும் குறைவு. அரை வயிற்றில் , அந்ததள்ளாத வயதிலும், தன் மருமகளிடம் தான் உழைக்கசளைத்தவனில்லை என செயலில் காட்டிவிட்டார்.

அந்த பணத்தை மனைவி பெயரில் டெப்பாசிட் செய்யப்போவதாகவும், வரும் வட்டி பணத்தில் காலம் தள்ளப்போவதாகவும், மருமக கையால் ஒரு சொட்டு தாண்ணீர் கூட அருந்தக்கூடாது எனவும், பேரக்குழந்தைகள் முகத்திற்க்காக செல்வதாகவும் கூறினார். பணம் தான் தம்பி இந்த உலகத்துல எல்லாம், பாத்து சூதானமாஇரு என்றார். நான் சிரித்து வைத்தேன்.அவர் சொல்வதுமுற்றிலும் சரியும் அல்ல, தவறும் அல்ல.  

Comments

  1. இதை எல்லாம் தங்களுக்கு புத்தி வந்தால் மகிழ்ச்சியே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!