காயிலான் கடை..!!
இந்த வார்த்தை தான் நம்
வாழ்க்கையில் எத்துணை அழகாக பின்னி பிணைந்து விட்டது.ஏனோ தெரியவில்லை அது குறித்த
நினைப்பு வந்து தொலைத்துவிட்டது. வருடா வருடம் பழைய புத்தகங்களை எடைக்கு
போட்டுவிட்டு கிடைத்த பணத்தை, அடுத்தவருட நோட்சுகளை வாங்க
உண்டியலில் சேர்த்து வைத்தது, வீட்டின் மூலையில்
அவ்வப்போது கிடக்கும் மது பாட்டில்களை
எடைக்கு போட்டுவிட்டு சோன்பப்டி வாங்கித் திண்பது என அந்த பழைய, பசுமையான நினைவுகள் கண் முன் நிழலாடியது. பழைய பொருட்களை விற்கும் கடைக்கு எப்படி இந்த
வார்த்தை வந்தது என்று ஒரு போதும் யோசித்ததே கிடையாது. ஏனோ இன்று சிறு மூளையில்
ஒரு சிறு பொறி வெட்ட அது குறித்த தேடலைத்துவங்கினேன். காயிலான் கடை என்ற வார்த்தைக்கு பின்னான வரலாறு
மிக சுவாரசியமாய் இருக்கிறது.உண்மையும் கூட.
இதற்கு நாம் முதல் உலகப்போர் நிகழ்ந்த காலத்துக்கு தான் பயணிக்க வேண்டும்.
நம்மவர்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் விடாப்படியாக
காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அது யாதெனில் எப்பொருள் எக்கேடு கெட்டு போனாலும்,
பயன்படாமலே போனாலும் அதை தூக்கி எறியவும்
மனமில்லாமல், பிறருக்கு கொடுக்கவும் மனமில்லாமல் குப்பையாய்
குவித்து வீட்டிலே சேர்த்து வைத்தல்.
உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் பழைய மருந்து, மாத்திரைகள். இரண்டு கால் நூற்றாண்டுகளுக்கு
முன்னால் யாருக்கோ உடல் நிலை சரியில்லாத போது வாங்கி வந்த அவற்றை நலமான பின்பும் தூக்கி எறிய மனமில்லாமல்
மாமாங்கமாய் உடன்வாழ அனுமதித்திருப்பது.என்ன தான் வருடா வருடம் போகி
கொண்டாடினாலும்,
தூக்கி எறியாமல், பழைய டேப் ரெக்கார்டுகள், டார்ச் லைட்டுகள் என நாம் குவித்து வைத்திருக்கும் குப்பைகள் ஏராளம். ஆனால்
வெள்ளையர்களிடம் அந்தப் பழக்கம் இல்லை. அவர்கள் அவ்வப்போது பழையனவற்றை , பயன் படாதவற்றை தூக்கி எறிவதை வாழ்க்கையின் அங்கமாகக் கொண்டவர்கள். அவர்கள்
தாம் காயிலான்கடை பிறப்புக்கு சூத்திர தாரிகள்.
இன்றைய சென்னை ராயப்பேட்டையில் முதலியார் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் முதல் உலகப்போர் காலக்கட்டத்தில் கம்பெனியில் சீமெண்ணெய்
(கிருஷ்ணாயில்) வாங்கி அதை அரசுக்கு விற்று வந்திருக்கிறார்கள். உலகப்போரால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டு விட, குதிரைகளையும் , வண்டிகளையும் எடுத்துக்கொள்ளச்
சொல்லியிருக்கிறார்கள்.அப்படி எடுத்து வந்த குதிரை வண்டிகளை மயிலாப்பூர் ஐயர்
கோஷ்டிகளிடம் விற்றிருக்கிறார்கள். அதோடு நில்லாமல், மரம், ஆணி, அச்சு, சட்டம் என
பலவற்றையும் சேர்த்து விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன்பின் வெள்ளையன் ஓடாத,பழைய
லாரிகளை கொடுத்திருக்கிறான். அதையும் வாங்கி உடைத்து சில்லறையாக
விற்றிருக்கிறார்கள்.அன்று தொடங்கியது தான் இந்த ஓட்ட ஒடசல் வியாபாரம். முதலியார் சமூகம் பழைய பொருட்கள் வியாபாரத்தில் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் கோலோச்சியது, அது போலவே காயல்பட்டிணம் பகுதியை சேர்ந்த துலுக்கர்கள் சென்னையிலிருந்து வாங்கிச்
சென்று தென்தமிழகத்தில் விற்கத்தொடங்கியிருந்தார்கள். காயல்பட்டணத்தைச்
சேர்ந்தவர்கள் ஆரம்பித்த கடையே பின்நாளில்
“காயலான்” கடை என்று
அழைக்கப்பெற்று அதுவே நிரந்தர அடையாளமாகிப்போனது வரலாறு கூறும் உண்மை.
இந்த காயலான் கடை துவக்கத்திற்கு நதி மூலமும், ரிஷி மூலமும் வெள்ளையன் என
எண்ணும் போது சற்று வியப்பாய்த் தான் இருக்கிறது.

Comments
Post a Comment