பட்டத்து யானை..!
புத்தகம் குறித்தெல்லாம் எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது.காரணம்
சோம்பேறித்தனம்.மட்டுமல்லாது, எந்த ஒரு புத்தகமும் எழுதும் அளவு உற்சாகமூட்டவில்லை.
தேமே என எழுதி வைத்திருக்கிறார்கள். நாலு பக்கம் புரட்டுவதற்குள் நாற்பது முறை கொட்டாவி
வந்து தொலைக்கிறது. ஆனால் பட்டத்து யானை அப்படியல்ல. 410 பக்கம், ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நாவல் படித்த மகிழ்ச்சி.அதுவும் ஒரே கல்பில். பிடிக்காத
போதும் மகிழ்ச்சியில் கூடுதலாக இரண்டு இட்லி சேர்த்து முழுங்கினேன். எல்லாம் கிடக்கட்டும்
புத்தகத்துக்கு வருவோம்.
ஆப்ப நாடு என்ற ராமநாதபுரம் சுற்று வட்டார மக்களின் வாழ்க்கையை
புத்தகம் முழுமையாக பதிவு செய்திருக்கிறது. வீரத்திலும் , தீரத்திலும் ஆப்பநாடு மக்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள், ஒற்றுமையாய் எப்படி வெள்ளைக்கார ஆதிக்கத்தை எதிர்த்தார்கள், அவர்களின் சூழ்ச்சியால் எப்படி வீழ்ந்தும் போனார்கள் என்பதை சிறிதும் கலப்பில்லாமல்
நாவலாய் வடித்திருக்கிறார்.
ரணசிங்கம் என்ற பெயரை இனி வாழ்நாளில் மறக்க இயலாது.கதை நாயகனான, “ரணசிங்கம்”,அவன் தம்பி தங்கசாமி,தங்கை மாயழகி, மகன் துரைசிங்கம் என அனைவருக்காவும் கண்ணீர்
கசிகிறது விழிகள். அதுவே நாவலாசிரியர் வேல. இராமமூர்த்தி யின் வெற்றி.சுதந்திரத்திற்கு
முந்தைய காலத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளின் கலவையாய் இதை வடித்திருக்கிறார். வ.ஊ.சி, சுப்பிரமணிய பாரதியை அறிந்த நமக்கு சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனுக்கு
பெரும் பொருட்செலவையும் , தலைவலியாகவும் இருந்த ரணசிங்கத்தை அறியாதது
பேரிழப்பே..! இந்திய விடுதலை இரணுவத்தில் இணைந்து கொரில்லா பயிற்சி, வெடிகுண்டு தயாரித்தல், அனைத்து வகைத் துப்பாக்கிகளையும் பிசகில்லாமல் இயங்கும் பயிற்சி, தலைமைப்பண்பு என அனைத்திலும் தேர்ந்து , தெற்கில் விடுதலைப்போரட்டத்தை
முன் நின்று நடத்தி துளி பிசகாமல் வெற்றியும் கண்டவனை கண்டு ஆடிப்போனார்கள் வெள்ளைக்கார
சில்லரைகள்.
என்றுமே தமிழர்களை நேரடியாக வீழ்த்த முடியாது.வஞ்சத்தால் மட்டுமே
மட்டுமே வீழ்த்த முடியும் என்பதற்கு ரணசிங்கம் ஒரு வரலாற்று சாட்சி. நேரடியாக மோத வக்கில்லாத
வெள்ளைப் பன்றிகள், ரணசிங்கத்தின் உறவான உடையப்பனை வைத்தே வீழ்த்தியது
ஆகச்சிற்ந்த ஒரு வரலாற்று உதாரணம். என்றுமே உறவுகளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இல்லையேல் எவ்வளவு பெரிய வீரனாய் இருப்பினும், ரணசிங்கத்தைப்போல்
வீழ்வோம் என்பது நிச்சயம்.!

Comments
Post a Comment