கட்டைவிரல் காயமும், முக்கால் மண்டலமும்...!!
என்ன கடுப்புல வேலை செஞ்சேன்னு தெரியல, கேபிள் டை நறுக்கும் போது வலது கை கட்டைவிரல்ல 1.5 செமீ அளவுக்கு 90 டிகிரில நேரா பொளந்துடுச்சு கடந்து போன பிப்ரவரி 27 ந் தேதி. கூட வேலை பார்க்குறவனுங்க முதலுலதவின்ற பேர்ல மூணு நாளு பேண்ட்டேஜ கண்டமேனிக்கு ஒட்டி விட்டானுங்க. அடிபட்டப்ப கூட வலி தெரியலை.நேரம் ஆக ஆக சுருக் சுருக் னு வலி ஏற ஆரம்பிச்சுச்சு. சின்ன காயம் தானா அப்படின்னு நினைச்சேன்.ஆனா இவனுங்க ஒட்டுன பேண்டேஜ தாண்டி ரத்தம் பொளந்த இடத்துல இருந்து பீறிக்கிட்டு வந்துச்சு.
ஒரு முழு பனியன சுத்தி கைய புடிச்சிக்கிட்டு சைட்ல இருந்து வந்து , கேம்ப் ஹாஸ்பிட்டல்ல ஆப்பிள் நறுக்கும் போது கை பொளந்துடுச்சுனு ஒரு புரூடா விட்டு (உண்மை தெரிஞ்சா சேப்டி வைலேசன்னு ஒரு என்குயரி நடக்கும்) டாக்டர பாக்கப்போனா, கம்பவுண்டர் வந்து ஹைட்ரஜன் பெராக்சைட ஊத்தி கிளீன் செஞ்சு, ஒரு ஆயில் மெண்ட அவன் கைல படாம எண்ணெய்க்கு மேல முறுக்கு புழியற மாதிரி என் கட்டைவிரல் மேல புழிஞ்சு கட்டுனான் பாருங்க ஒரு கட்டு, கட்டைவிரல் கல்தூண் மாதிரி ஆகிடுச்சு. மிச்சமீதி ஆயில்மண்ட் கையில குடுத்து, வலி தெரியாம தூங்க மாத்திரை ஒரு நாலு கொடுத்தான். தையல் போட வாய்ப்பில்ல கை நுணி வேற, மூனு நாள் கழிச்சு கட்ட அவுத்துடு. தண்ணி படக்கூடாதுனு அட்வைஸ் வேற.கடைசி வர டாக்டர காட்டவே இல்ல.
அவன் போட்ட கட்டுல போறவன் வரவன் லாம் கைல ஆப்ரேஷனான்னு ஆளாளுக்கு ஒன்னு கேட்க கடுப்பு தான் ஆச்சு. போதாக்குறைக்கு சேப்டிக்கு பயந்து கைய பாக்கெட்டுக்குள்ளயே விட்டுட்டு திரிஞ்சேன். கட்டைவிரல்ல சின்னதா அடிபட்டுருக்கு இதுக்கு ஏன் இப்படி சீன்போடுறான்னு கேட்டவங்களுக்கு.
- சப்பாத்தி இன்ன பிற வஸ்துக்களை பிச்சு சாப்பிட முடியலை
- சட்டை பட்டன் போட முடியலை
- ஷீ லேஸ் கட்ட முடியலை
- பல்லு விளக்க முடியலை
- பேனா புடிச்சி எழுத முடியலை
- டைப் அடிக்க முடியலை
- தலை வாரிக்கொள்ள முடியலை
- சோப்பு போட்டு குளிக்க முடியலை
- துணி மடிக்க,துவைக்க முடியலை
- ஃபிங்கர் பிரிண்ட் ஆக்சஸ் பண்ண முடியலை
- சீட் பெல்ட் போட முடியலை − ன்னு எக்கச்சக்கமா தினசரி நடவடிக்கையை எல்லாம் கொத்துபுரோட்டா போட்டு வச்சிடுச்சு.
ஒரு மண்டலம் கால் அடிபட்டு கிடந்தப்பக்கூட நடக்கறது மட்டும் தான் முடங்குச்சு.ஆனால் இந்த கட்டைவிரல்ல அடிபட்டது மொத்தமா தினசரி வாழ்க்கையை கொதறிவச்சிடுச்சு.எல்லாப்பயலும் சின்ன காயம் தான, சின்ன காயம் தானனு எகத்தாளம் வேற.ஒரு முக்கால் மண்டலம் கழிச்சு இப்பத்தான் கையால சாப்பிடவே முடியுது. ஆகவே வள்ளுவர் மகான் சொன்னார்," உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து". சின்னதாயினும் கவனமாய் கையாள வேண்டும். இல்லாவிட்டால் துன்புற்று கதற வேண்டும். இடியே விழுந்தாலும் நிதானமிழக்காமல் பணி செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் மெய்யாய் கண்டுணர்ந்தேன்..!!
Comments
Post a Comment