நூற்றாண்டு கம்பீரம்..!!

எத்தனை தலைமுறையை பார்த்தவங்க நாங்கன்னு ஊருக்குள்ள இந்த பெருசுங்க சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.ஆனால் மனுசங்களை விட இந்த வாக்கியத்தை சொல்லிச்சொல்லி பெருமை பட இயற்கையால மட்டும் தான் முடியும். அது பார்க்காத தலைமுறையா என்ன?

இது இயற்கையா உருவானது இல்லை. மனுசன் கட்டுனது தான்.  ஆனால் பல தலைமுறை மரணத்தையும், ஜனனத்தையும் பார்த்தது.

தொண்ணுருகளின் தொடக்கத்துல,அடிக்கடி பெய்த பெருமழைல மருதூர் அப்படின்ற  ஊர்ல வந்த வெள்ளத்துல கிராமத்துல வீடெல்லாம்  இடிஞ்சு விழ, ஒரு நெசவாள  குடும்பம் மட்டும்  அந்த ஊர விட்டு வேற இடம் மாற முடிவு  பண்ணுச்சு. அந்த ஊர்ல இருந்து சில மைல் தொலைவுல இருந்த இடத்துல  ஜமீன் கிட்ட இருந்து இடத்த வாங்கி புதுசா ஒரு கிராமத்த உருவாக்கி வச்சிருந்தார் செல்லக்குட்டி அப்படின்ற பெரியவர். அந்த ஊர்ல ஒரு இடத்த கேட்டு வீடு கட்டி குடி போச்சு ஒரு குடும்பம். அந்த குடும்பம்  வேற யாரும் இல்லை என் கொள்ளுத்தாத்தா செல்வகணபதியோடது   தான்.

நல்ல நாட்டு வோடு  வேய்ஞ்சு , தடி தடியான சுவத்த வச்சி, வழிப்போக்கனுங்க  ஓய்வெடுக்க  இரண்டு பெரிய திண்ணை வச்சி,  இப்ப இருக்க செங்கல்லை விட சப்பையான சுட்டகல்லுல  சுவத்தவச்சு , நல்ல பெரிய வாசல் வச்சு, இந்தக்காலம் மாதிரி தனித்தனி ரூம் இல்லாம தறி போட வசதியா, நடமாட வசதியா   நல்லா இடம் விட்டு, காத்தோட்டத்துக்காக வடக்கு,தெற்கு பார்த்து   கட்டுன சுத்துக்கட்டு வீடு. மேற்குப்பக்கம்  முழுசா முந்திரிக்காடு.  கிழக்கு பக்கம் எந்த வீடும் அப்ப இல்லைன்னு  என் தாத்தா  சொல்லியிருக்கார். வீடு கட்டி கொஞ்ச நாள்ல , இடப்பக்க சுவர் அங்க பேஞ்ச மழைல இடிஞ்சு விழ, ஊர் செலவுல செம்பாறாங்கல்லுல சந்துப்பக்கம் அதாவது மேற்குப்பக்கம்   கட்டிக்கொடுத்தாங்க.  அதுக்கப்புறம் கிழக்குப்பக்கம் கட்டுன எல்லாவீடும், மேற்குப்பக்கம் இருக்க வீட்டு சுவத்தோட புணைஞ்சு தான் கட்டிட்டு போனாங்க.

வீடுகளுக்கு நடுவுலயும்  இடைவெளி இல்லை, மனுசங்க மனசுக்கும் இடைவெளி இல்லை. ஒத்துமையா வாழ்ந்துட்டுப் போய்ட்டாங்க. கொள்ளுதாத்தா காலத்துக்கு அப்புறம் என் பழனியாண்டி தாத்தாவும்  அவரோட பொறந்த ஐந்து தாத்தாவும் அந்த வீட்டுல தான் வளர்ந்தாங்க.பொக்கையும் போறையுமா இருந்த   மண்ணு தரையில இருந்து சிமெண்ட்டு தரைக்கு என் தத்தா காலத்துல  பிரமோட் ஆச்சு வீடு.  தத்தாவோட சேர்த்து அண்ணன் தம்பி அஞ்சு பேருக்கும் அந்த வீட்டுக்கு முன்னாடி தான் கல்யாணம் ஆச்சு.  அந்த காலத்துல மண்டபம் எல்லாம் கிடையாது.  வீடு தான் அந்தந்த நேரத்துக்கு  ஏத்த மாதிரி பெயரை மாத்திக்கும்.குடும்பமே ஜவுளி வியாபாரத்துல கொடிகட்டி பறந்துச்சு, போலவே வீட்டுல பசுவும், எருமை மாடும் வளர்த்ததா பெரியவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தான் ஆடு, மாடு வளர்க்குறதெல்லாம் கொளரவக்கொறைச்சல் ஆகிடுச்சு.   
தாத்தாவுக்கும், அவர் தம்பிங்களுக்கும் வாரிசுகளா உருவாக, வீடு எந்நேரமும் குழந்தைங்க சத்தத்துல நிறைஞ்சு கிடந்துச்சு. எல்லாத்துக்கும் ஒரே உலை தான். தனித்தனிக்குடும்பமா சமைக்கிற வழக்கம் இல்லை. கூட்டுக்குடும்பம், ஒரே சமையல், எல்லாம் ஒன்னு மண்ணா சாப்பிட்டு வளர்ந்தாங்க. எந்த மனவலியும் இல்லாம. 1962 ல என் வீட்டுக்கு மொத மொதல  கரண்ட் வந்துச்சு.

என் தாத்தாவுக்கு என் அப்பாவோட சேர்த்து மூணு பசங்க, ஒரு பொண்ணு. காசி பெரியப்பா பெரியவர். தங்கராசு பெரியப்பா தான் நடுவுல. என் அப்பா தான் கடைக்குட்டி. என் அப்பாவும், காசி பெரியப்பாவும் பத்தாவதோட படிச்சு கிழிச்சதெல்லாம்  போதும்னு படிப்ப நிப்பாட்டிக்க, தங்கராசு பெரியப்பா மட்டும் தான் ஒழுங்கா படிச்சு வீட்டுல டிகிரி வாங்குனார். வீட்டின் முதல் பட்டதாரி. தாத்தாவோட தம்பி பசங்கள்ல  சிலர் பள்ளிக்கூடத்தோடவும், சிலர் டிகிரியும் வாங்க. ஆளாளுக்கு ஒரு திசைல பயணிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

என் அப்பா. பெரியப்பாங்க எல்லாருக்கும் வீட்டு முன்னாடி தெருவுல பந்தல் போட்டு தான் கல்யாணம்  நடந்துச்சி. என் தாத்தா காலத்துல கல்யாணத்துக்கு  கஞ்சியும், கூழும்  போட்டவங்க, 80 கள்ல நடந்த  என் அப்பா காலத்துல சோறுக்கு  பிரமோட்  ஆகிட்டாங்க. அப்பா கல்யாண ஆல்பம் பார்க்க பார்க்க வியப்பா இருக்கும்.   அதுக்கப்புறம்   என் தாத்தாவோட தம்பி பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆக ஒவ்வொருத்தரா தன் பாகத்த வித்துட்டு  தனியா குடித்தனம் போக ஆரம்பிச்சாங்க.

காசி பெரியப்பா பக்கத்து தெருவுல வீடு கட்டிட்டு போக, தங்கராசு பெரியப்பா வேலை கிடச்ச இடத்துல செட்டில் ஆக, வீடும், தாத்தாவும் கடைசியா எங்கக்கூட இருந்தாங்க.  காசி பெரியப்பாவுக்கு, இரண்டு பொண்ணுங்க (ராணி அக்கா, வாணி அக்கா),மூணு பசங்க(கொளஞ்சி அண்ணா, குரு அண்ணா,குமார் அண்ணா) தங்கராசு பெரியப்பாவுக்கு இரண்டு பொண்ணுங்க( ரமா அக்கா, பவி அக்கா). அப்பாவுக்கு  நாங்க மூணு பேர். அண்ணன் , நான், அப்புறம் தங்கச்சி.  மொத்தத்துல ஐஞ்சு பசங்க,ஐஞ்சு  பொண்ணுங்க. த கிரேட் பாண்டவாஸ்.

என் அண்ணன் பொறந்தப்ப தான் வீட்டுல மொத மொதல்ல மின் விசிறி வாங்கி உத்திரத்துல மாட்டுனாங்க. 90 ல வாங்கி  இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு. சில தடவை ரிப்பெயரும் ஆச்சி. நான் பிறந்தப்ப தான் வீடு  சிமெண்ட் தரையில இருந்து டைல்ஸ்க்கு மாறுச்சு. தங்கச்சி பொறந்து சில வருசத்துல கருப்பு, வெள்ளை டீவியும், டீ வி எஸ் எக்சல் வண்டியும் வந்து சேர்ந்துச்சு இரண்டாயிரம் வாக்குல.

எனக்கு நினைவு தெரிஞ்சு எத்தனையோ மழை காலத்துல, திண்ணையில உட்கார்ந்து தெருவையும், பட்டாசாலையில உட்கார்ந்து  வாசல்ல நிரம்பி ஓடுற தண்ணியையும் அதில ராக்கெட்டையும் விட்டு, கூடுவா மூலையில ஒழுகுற தண்ணிய பிடிச்சு  விளையாடியும், வேடிக்கப் பார்த்தும் கழிச்சிருப்பேன். வெளியில 40 டிகிரி அடிச்சாலும், என் வீடு சூடு காமிச்சதில்லை. மார்கழி பனியில அந்த சுவத்த ஒட்டி அது தர ஜிலுஜிலுப்புல  எத்தனை நாள்  முழிச்சிக்கிட்டே போர்வைக்குள்ள கிடந்துருக்கேன்.  லீவ்ல ஒருநாளும் அப்பாவை விட்டு சாப்பிட்டதில்லை. அப்பா வரவரைக்கும் காத்திருந்து எல்லாரும் ஒன்னா தான் சாப்பிடுவோம்  பட்டாசாலையில.
மழை பெய்ஞ்சா ஒழுகுற, வாசல் மூலமா சாரல் அடிக்கிற வீடு தான். வீடு என்கிட்ட திட்டு வாங்காத மழை நாளே இல்லை.அடிகடி ரீப்பர்ல,சுவத்துல செல்லு பிடிக்கும். திட்டிக்கிட்டே செல்லு தட்டுவோம். ஆனாலும் பிடிக்கும். வீட்டு முன்னாடி நின்னு அந்த ஓட்டு வரிசைய பாத்துக்கிட்டே இருக்கலாம். ஓட்டுக்கூரையில குருவிங்க காலையிலயே வந்து சிறகுக்குள்ள முகம் புதைச்சு சோம்பல் முறிக்கிற அழகு, வாசல் வழியா வீட்டுக்குள்ள வர சூரிய ஒளி, ஓட்டு இடைவெளியில வீட்டுக்குள்ள வர வெளிச்சம், அதே இடைவெளியில  மழை காலத்துல ஒழுகுற மழைத்தண்ணி, அதை பிடிக்க வைக்குற பாத்திரம்.

வாசல் வழியா தெரியுற பக்கத்து வீட்டு மாமரம், காத்துல அது ஆடுற லாவகத்த வடிவேலு மாதிரி மல்லாக்கபடுத்து வேடிக்கை பார்த்த மதியங்கள், உடன் பிறப்புகளோட நான் போட்ட சண்டைகள்ன்னு, அந்த வீடு கொடுத்த சந்தோசம் ஏராளம், நினைவுகள் ஏராளம். கிட்டத்தட்ட நூற்றாண்டை கடந்த அந்த வீடு, மருதூர்ல இருந்து வந்து கட்டுனதால மருதூராமூடுன்னும், ஊர்லயே மொதமொதல்ல மாங்கா பச்சடி போட்டதால மாங்கா வீடுன்னும் பெயர் வாங்குன, என் தாத்தா உட்பட பல மரணத்தையும்,கொளஞ்சி அண்ணா உட்பட பலர் ஜனனத்தையும் பார்த்து வந்த  அந்த நூற்றாண்டு கம்பீரம் இப்ப இடிஞ்சி கிடக்கு. புது வீடு கட்ட பழைய வீட்ட இடிச்சு மத்த வேலைய ஆரம்பிச்சுட்டாங்க...! கொஞ்சம் விட்டா இன்னும் இரண்டு வருசத்துல அதுவே இடிஞ்சி விழுந்துருக்கும். அதான் முன்னாடியே இடிச்சாச்சு.என்னமோ தெரியலை இடிக்கிறதுக்கு முன்னாடி படையப்பா சிவாஜி மாதிரி கடைசியா ஒரே ஒரு தடவை கட்டிப்பிடிக்கக்கூட வாய்ப்பு கிடைக்கல. போட்டோல தான் பார்த்தேன். என் கம்பீரம் கசங்கிக்கிடக்கு...! மனசும் அதை சுத்தி தான் கிடக்கு!   

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!