செவ்வாயில் மனிதன்..!!
இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் ஏலியன் குறித்தான செய்திகளுக்கும், பல்வேறு வகையான கற்பனைகளுக்கும் அஸ்திவாரமிட்டது 1971ல் நாசாவின் செயற்கைக்கோளான வைகிங் 1(viking1) வெளியிட்ட ஒரு புகைப்படம்.
செவ்வாயை ஆராய நாசா அனுப்பிய அந்த விண்கலம் சைடோனியா(cydonia) எனும் செவ்வாயின் பரப்பை எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் சாட்சாத் மனிதனின் தலைபோன்றே ஒரு உருவம் பதிவாகியிருந்தது.
அவ்வளவுதான், நம் ஊரில் எப்படி விநாயகர் வடிவத்தில் ஒரு மரம் இருந்தால் அதை சாமி ஆக்கிவிடுகிறோமோ.! அதே போல் அந்தப்புகைப்படம் வெளியானதும் பலரும் செவ்வாயில் மனிதர்கள் வாழ்கிறார்கள், இல்லை அவர்கள் ஏலியன்கள் என்பது போன்று அவரவர் சார்ந்து ஒரு முடிவுக்கு வந்து தொலைத்தார்கள்.வதந்தி வாயர்கள் எந்த ஒரு காலத்திலும் தங்கள் சேவையே நிப்பாட்டியதே இல்லை. செவ்வாயில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இதை வைத்து சிலர் தொடர்ந்து பேசவும் செய்தார்கள்.நாசா ஏதோ மறைப்பதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள் இந்த ஆராய்ச்சிப் புலிகள்.
"face of mars" மிகப்பெரும் பேசுபொருளானது. அதைத்தொடர்ந்து ஏலியன் சார்ந்த படங்களும், மற்ற கிரகங்களை சார்ந்த மனிதர்கள் பற்றிய படங்களும் வரிசைக் கட்டி வரத்தொடங்கியது.புத்தகங்கள் எழுதித்தள்ளப்பட்டன. ரேடியோக்கள் ஓயாமல் அதைப்பற்றி பேசின.
ஆனால், நாசா இதைமுழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ஆராய்ச்சியை முடுக்கிவிட்டது.
1997ல் அனுப்பப்பட்ட அடுத்த விண்கலமான MGS(Mars Global Surveyor) முன்னர் எடுத்தப்புகைப்படத்தை விட பத்து மடங்கு துல்லியமான புகைப்படத்தை எடுத்து அனுப்பியது. அதில் ஏறக்குறைய அங்கு தெரிவது மனித உருவம் அல்ல. மணற்குவியல் தான் என்ற முடிவுக்கு வந்தது.
ஆனால், வதந்தி வாயர்களோ புகைப்படம் மங்கலாக இருக்கிறது, இன்னும் தெளிவாகத்தெரியவில்லை.. புகைப்படத்தை வேறு கோணத்தில் எடுத்துள்ளீர்கள். அதே கோணத்தில் எடுக்கவில்லை என்றெல்லாம் குற்றம் சுமத்தி அழிச்சாட்டியம் செய்தார்கள். எடுக்கப்பட்ட புகைப்படம் புகைமண்டலமாகக் காட்சியளிப்பதால் ஏலியன்கள் சரிவரத்தெரியவில்லை என மறுப்பு தெரிவித்தார்கள்.
தலைவிதி என தலையில் அடித்துக்கொண்ட நாசா ஆராய்ச்சியாளர்கள், 2001ல் இரண்டாவது முறையாக மிக நெருக்கமாகச் சென்று புகைப்படத்தை எடுத்து வந்தார்கள். அது அப்பட்டமாக அங்குத்தெரிவது மனித உருவமோ,ஏலியனோ அல்ல என்பதை பறைசாற்றியது.
ஆனாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஏலியன் குறித்த தங்கள் கற்பனைகளை விட்டுவிடுவதாகத்தெரியவில்லை
நம் ஊரில் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கும் போது, மாப்பிள்ளை என்னமோ நல்லவர் தான், ஆனால், கோபக்காரர் என டொக்கு வைத்துப்பேசுவது போல்… இது குறித்து கருத்து சொல்லும் புரளியின் ஆதரவாளர்கள் "நாசா சொல்வது என்னமோ உண்மை தான். ஆனால், வேற்று கிரக வாசிகள் நம் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்" என சொல்லிச்சிரிப்பார்கள்.
இன்றளவும் ஏலியன் குறித்தான பல்வேறு புரளிகளுக்கும்,கற்பனைகளுக்கும் அடித்தளமிட்டது நாசா வெளியிட்ட அந்த முதல் புகைப்படம் தான்.
நன்றி..!


Comments
Post a Comment