நோ மீன்ஸ் நோ பாடிய அரபுக்கிளி..!
என்றோ போலீஸ் டிரைனிங் அகாடமியில், காம்பவுண்ட் சுவர் இல்லாத காலத்தில், மாடுகள் நுழைந்து அங்கு வளர்த்துவந்த செடிகளைத் துளிர்விட துளிர்விட பகலிரவுப் பார்க்காமல் தின்று வைக்க, அவை மேற்கொண்டு மேய்ந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு பெயர் தெரியாத உயராதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் தினம் ஒரு காவல் அதிகாரி மாடுகளை விரட்ட காவலுக்கு நிற்க வைக்கப்பட, அந்தச் செடி மரமாகிவிட்ட இன்றும் ஒரு போலீஸ்காரர் இரவுகளில் மரத்தடியில் நின்றுகொண்டிருப்பார். ஏன் நிற்கிறார் என்று அவருக்குத் தற்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உயரதிகாரி நிற்கச்சொன்னார் அதனால் நிற்கிறார். இந்தக்காட்சி டாணாக்காரன் படத்தில் வரும். ஏன்? எதற்கு? என்றெல்லாம் அதிகாரிகளிடம் கேட்க முடியாது. அதிகாரி சொன்னால் கேட்க வேண்டும். அவ்வளவு தான். அரசு இயந்திரம் என்று சும்மாவா சொன்னார்கள். உயர் அதிகாரிகளின் கட்டளையே சாசணம். அதை எதிர்த்து பேசிய பட்டாபியின் நிலையையும் அந்தப் படத்தில் பார்த்தோம் அல்லவா! அதே போல் தான் எங்கும். அதிகாரி சொன்னால் பால் கசக்கும் என்று கூட ஆமோதிப்பார்கள்.
கொரானா நேரத்தில் நாளொரு உத்தரவு, மணிக்கொரு மாற்றம் என விமான நிலைய ஊழியர்களுக்கே எதைப் பின்பற்றுவது என்று தெரியாமல் பெருங்குழப்பம் நடந்தது தெரிந்த விஷயம் தான். ஆனால், இன்னும் அதிலிருந்து சில கொள்கைகளைச் சிலர் விடாப்பிடியாக கடைபிடித்துக்கொண்டிருப்பது தான் ஆச்சரியம், உதாரணத்துக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணத்தின் போது நிரப்பப்படும் ஏர் சுவிதா ஃபார்ம். பெரும்பான்மையினர் தடுப்பூசி போட்டுவிட்ட பின், கொரானா தொற்று அடங்கிய பின்னரும் அதன் தேவை தற்பொழுது என்னவென்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு முக்கிய வேலையாக குவைத் செல்ல வேண்டும். கையில் என்ட்ரி விசா இருக்கிறது. அங்கு சென்றதும் ரெசிடண்ட்க்காக ஆர்ட்டிகிள் 14 ஆக மாற்றுவது தான் திட்டம். நுழைவதற்கு என்ட்ரி விசா போதுமானது. என்றோ,ஏதோ ஒரு பிரச்சனையில் வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் ஒரிஜினல் விசா இல்லாமல் செல்லக்கூடாது என்று யாரே இட்ட கட்டளையை, ஈ விசா வந்துவிட்ட இன்றும் கூட அசல் விசா கேட்டு அடம் பிடிப்பவர்களை என்ன சொல்ல? அதுவும் அரேபிய அழகி ஆகிவிட்டால் எங்ஙனம் முறையிடுவது? குழைந்த பேச்சில் ஜாமாகிவிட்ட மூளையை எப்படி மீட்டெடுப்பது?
மழலைக்குப்பாடமெடுப்பது போல் என் பயணத்தைத்தடுத்த அந்த அரேபிய அழகிக்குப் பாடமெடுத்துப்பார்தேன், அம்மா தாயே ஒரிஜினல் அங்கு சென்றதும் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்வார்கள் இந்த என்ட்ரி விசா காப்பி பயணத்திற்குப் போதுமானது, ஆளைவிடம்மா என்று கதறிப்பார்த்தேன்,
ஏதாவது பிரச்சனையென்றால் அவர்களே திருப்பி அனுப்பிவிடுவார்கள், ஏற்கனவே போய் வந்திருக்கிறேன், இதொன்றும் முதல் பயணம் இல்லை என்றும் அழகியிடம் மேலும் மேலும் சொல்லிப்பார்த்தேன், அழகியின் கண்கள் நோ மீன்ஸ் நோ பாடியது.
ஒன்றரை மணி நேரம் அங்குமிங்கும் அலைந்தது தான் மிச்சம். அடிக்கடி நான் பார்க்கும்போதெல்லாம் அந்த அழகி கண்களால் நோ சொல்லிக்கொண்டே இருந்தார். துயரத்த! நான் இன்னும் ப்ரபோஸ் பண்ணலையேம்மா?! அதுக்குள்ள எத்தனை நோ!? நோ நோ..!!
எங்கோ உள்மனதில் உன் பயணம் நிச்சயமென பட்சி சொல்லவே, அமைதியாக சிறிது நேரம் யோசித்தேன். இந்த அரேபிய சில்க்கிடம் பேசி இனி பிரயோசனம் இல்லை. அம்முணியின் உயரதிகாரியாகிய ஆணோ,பெண்ணோ யாரோ ஒருவர், அப்பெருந்தலையைப் பார்த்துப் பேசினால்,அவர் ஒப்புக்கொண்டால் தான் உண்டு என்று முடிவெடுத்து, உயர் அதிகாரி அறை எங்கிருக்கிறது என்று அந்த அழகேப் பொறாமைப்படும் பேரழகியிடம் கேட்டு, அங்கு சென்று விஷயத்தை விளக்கினேன். அம்மணியும் உடன் வந்தார். சில்லென்ற காற்றை அந்த கலவரத்திலும் உணர முடிந்தது. ஷாம்பூ மணம் ஆளைத்தூக்கியது.
அப்பெரிய மனுசன் வாயைப்பிளந்து பர்கரை விழுங்கிக்கொண்டே என் கையில் இருந்த என்ட்ரி விசாவை வாங்கிப்பார்த்தாா். மையோனஸ் ஒட்டியக்கைகளால் லேண்ட்லைனில் சில விநாடிப்பேச்சுவார்த்தை, ரிசீவரை வைத்துவிட்டு கண்களால் எனக்குப்பின்னால் நின்று கொண்டிருந்த, என்னை நேரிலும் மனதிலும் விடாமல் பிடித்துவைத்திருந்த விடாக்கன்னியிடம் ஓகே சொன்னார். அவ்வளவு தான். அம்முணி எந்தத் தொந்தரவும் இல்லாமல் மற்ற வேலைகளை சிறப்பாகவே முடித்துக்கொடுத்தார். விமானம் புறப்படும் நேரம் நெருங்கிவிட்டபடியால், இம்மிகிரேஷன் வரை வந்து சிறப்பு அனுமதி வாங்கிக்கொடுத்தார். சில பல சாரிக்களை உதடு சுழித்து கழுத்தை சாய்த்து சொல்லிய பாங்கிற்கே பயணத்தை ரத்து பண்ணிவிட்டு அம்முணியுடன் அராப் காபி சாப்பிட சென்றிருக்கலாம். என்ன செய்ய கடமை தான் முக்கியம் என்று கண்கலங்க புறப்பட்டுவிட்டேன். வந்து இரண்டு நாளாகியும் அந்த அரேபிய அசின் என் கண்களிலே நிற்கிறார். நிற்பார். எப்பொழுதும்.
Comments
Post a Comment