சால்ட்டுமா..!!
சில வார்த்தைகள் நெருஞ்சி முள் போல் தைக்கும், சிலது ரோஜா போல் இனிக்கும். இன்று அவனைத் தைத்தது நிச்சயம் நெருஞ்சி முள் தான். இரண்டு மணி நேரம் சண்டைக்காட்சிகளால் ஆன படத்தைப் பார்த்துவிட்டு வந்தால் யாரையாவது பிடித்து அடித்து மண்டையை உடைத்தால் தேவலாம் என்பது போல் இருக்குமே ஒரு மனநிலை, அந்த மனநிலையில் தான் இருந்தான். அவ்வார்த்தையைக் கேட்டதில் இருந்து. தலையில் யாரோ சுத்தியை வைத்து நங்நங்கென்று அடிப்பது போல் இருந்தது. ரமண மகரிஷி போல், நான் யார்? எதற்காக வாழ வேண்டும்? என்றெல்லாம் கேட்டுக்கொண்டான். எச்சில் கூட விழுங்கப் பிடிக்கவில்லை. அவ்வார்த்தைத் தொண்டைக்குழியை பட்டர்பிளை வால்வு போல அடைத்துவிட்டது. வாழ்க்கையின் மீதே வெறுப்பு வந்துவிட்டது. எதற்காக வாழ வேண்டும் என மீண்டும் மீண்டும் யோசித்தான். தலைவலி. சுருக் சுருக். அவ்வார்த்தையைக் கேட்டுத்தொலையாமல் இருந்திருக்கலாம். ஒரு நிமிடம் சாவது குறித்துக்கூட யோசிக்கலானான். எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணங்கள் விரிந்தது. சட்டென்று அவ்வார்த்தை நினைவில் தோன்றி மறைய, அதையும் வெறுத்தான். தொலைக்காட்சியில் யாரோ எதையோ சாதித்த செய்தி கேட்டது, இந்தப் *@%# மட்டும் எப்படி இதையெல்லாம் சாதிக்கிறார்கள், அவர்களெல்லாம் இவ்வார்த்தையை அடிக்கடி கேட்க மாட்டார்கள் போல என எண்ணிக்கொண்டான். அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் எனவும், தான் சபிக்கப்பட்டவன் எனவும் மனதார நம்பினான். இவ்வாழ்க்கையை வெறுத்தான். எதற்காக வேலைக்குச் செல்ல வேண்டும்?, யாருக்காக சம்பாதிக்க வேண்டும்? ஏன் குளிக்க வேண்டும்? ஏன் பல் தேய்க்க வேண்டும்? ஏன் கட்டிலை விட்டு எழ வேண்டும்? அப்படியே உறங்கிக்கொண்டே இருந்தால் எவ்வளவு தேவலை. இந்தப் பசி சனியனால் தான் எல்லாம். அந்தச் சனியன் மட்டும் வயிற்றைப் பிடித்துப் பிசையாவிட்டால், அவன் அவளிடம் அக்கேள்வியைக் கேட்டிருக்க மாட்டான், அவளும் பதிலுக்கு அவ்வார்த்தையைச் சொல்லி இருக்கமாட்டாள். பசியை வெறுத்தான். பசியோடு படைத்த அந்தக் கடவுளை வெறுத்தான். மீண்டும் போர்வையை இழுத்து முகத்தை மூடி தூங்க முற்பட்டான். அவ்வார்த்தை அவன் இமைமூட இடந்தராமல் இம்சித்தது. ஆம் அவ்வார்த்தை. அப்பொல்லாத வார்த்தை. அக்கேள்விக்கு அவள் சொல்லிய பதில். உறக்கம் கலையாமல், " காலையில் சாப்பாட்டுக்கு என்ன?" என்று அவன் கேட்டது தான் குற்றம்.
"உப்புமா" என அவள் பதிலளித்ததில்லை.ஆம்.
"உப்புமா"
"உப்புமா"
அவ்வார்த்தை....
Comments
Post a Comment