இரயில் இம்சைகள்...!
மாதத்தில் பாதி நாட்கள் பயணங்களிலேயே கழிகிறது. அதிலும் பெரும்பாலானவை ரயில் பயணங்களே.! தமிழின் பிரபல பிராபல எழுத்தாளர்கள் சிலர் வாழ்வில் ஒருமுறையேனும் இந்தியாவை குறுக்கு நெடுக்காக சுற்றிப் பார்க்க வேண்டும் என எழுதி அடியேனின் ஆழ்மனதில் அது குறித்த ஆசைகளை விதைத்துத் தொலைத்துவிட்டபடியால், பயணங்களை ஒரு குதுகலமாக அனுகத் தொடங்கியிருந்தேன். அதிலும் குறிப்பாக ரயில் பயணங்களை!!! ஒவ்வொரு முறை என் ரயில் பயணமும் சொல்லாமல் சில விசயங்களை சொல்லிச் செல்லும். அவற்றை தொகுக்க எண்ணியே இதை எழுதுகிறேன்.
இந்த முறை பயணமானது மிகச் சிறியது. சுமார் 3 மணி நேரம் மட்டுமே! தாம்பரம் டூ விருத்தாச்சலம்.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டிக்கட்டுகள் அனைத்தும் முன்னரே புக்கிங் ஆகிவிட்டபடியால், அடியேன் 11 மணி தட்கலை மிகவும் எதிபார்த்துக் கத்திருந்தேன். நல்ல வேளை ஏமாற்றமில்லை. எம்.டீ.எஸ் மோடம் தன் மன்மதலீலைகளையும், எஸ்.பி.ஐ நெட் பாங்கிங் குட்டையை குழப்பாமலும் காப்பாற்றியபடியால் டிக்கட் பதியும் படலம் இனிதே நடந்தேறியது.
இளைஞனாகப் பட்டவன் ரயில் பயணங்களில் சில பல தியாகங்களைச் செய்ய வேண்டும். அதாவது முதியவர்களுக்கு அவர்கள் விரும்பும் சீட்டை விட்டுக்கொடுக்க வேண்டும் , இல்லாவிட்டால் இரக்கமற்ற பாவியாகிவிடுவான். அவனுக்கு எப்போதும் காற்றுவராத அப்பர் சீட் மட்டுமே உடன் பயணிப்பவர்களால் ஒதுக்கப்படும். ஜன்னல் சீட் வந்திருந்தால் அதை குழந்தைகளுக்கு வழங்கும் தியாக உள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். இதற்க்காக அவனுக்கு சில பல பிஸ்கட்டுகள் அந்த குழந்தையின் அம்மாவால் வழங்கப்படும்.
இன்றைய ரயில் பயணத்திலும் சீட் மாற்றும் படலம் அரங்கேறியது. ஸ்ரீ்ரங்கத்து சீனியர் பெரியவாள் ஏறிய வேகத்தில் எனக்கு வேற சீட் காட்டினாள். சரிப் போய் தொலையுது என இடம் மாறினேன். மாறிய வேகத்தில் கைக்குழந்தையோடு ஏறிய ஒரு இளஞ்சோடி பாஸ் கொஞ்சம் மாறி உட்காருறீங்களா? என விளிக்க அடியேன் மிகுந்த பெருமித்தத்தோடு இடம் மாறினான். அடுத்த ஸ்டாப்பிங்கில் ஏறிய காதல் ஜோடி சிங்கிளாக வந்த என்னிடம் ப்ரோ பிளீஸ் கொஞ்சம் சீட் மாறி உட்காருங்க எனக் கொஞ்சல் மொழி பாடியது. நான் மீண்டும் இடம் மாறலானேன்.அதற்குப் பதிலாக சிறு புன்னகையும், தாங்ஸூம், சில லேஸ் சிப்ஸ் துண்டுகளும் அடியேனுக்கு வழங்கப்பட்டது. அவள் அவன் தோள்களில் சாய்ந்துகொண்டு அவன் கன்னங்களில் , கழுத்துகளில் இருந்த அமீபா, பாக்டீரியா, போன்ற இன்ன பிற வஸ்துக்களை தட்டிவிட்டுக் கொண்டே இருந்தாள். கம்பார்ட்மென்ட்டே வெயிலின் தாக்கத்தில் கதறிக்கொண்டிருக்க , அந்த ஜோடி மட்டும் ஹனிமூன் டிரிப்பாக அந்தப் பயணத்தை மாற்றிக்கொண்டிருந்தது. வயிற்றெரிச்சல் எனக்கு.
அந்த இளம் தம்பதியர் ,ரயிலில் லக்கேஜ் வைக்கும் கேரியரில் தொட்டில் கட்டி அந்த குழந்தையை தூங்க வைத்தனர். உட்கார முடியவில்லை. பசி வயிற்றைக்கிள்ளியது. வடை, பஜ்ஜி, ஆம்லெட் என வகை வகையாக ஸ்நாக்ஸ் வகையறாக்கள் வந்து கொண்டே இருந்தன.அருகே ஒரு 4 வயது குழந்தை அங்கும் இங்கும் விளையாடிக்கொண்டிருந்தது. யார் ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் பார்த்துக்கொண்டெ இருந்தது, ஆனால், யார் கொடுத்ததையும் அந்த குழந்தை வாங்கவில்லை. இதனால் சற்று சங்கடமாக இருந்தது. எதையும் வாங்கி உண்ணமுடியவில்லை. ரயில் வேறு தாமதம். இன்று ரயிலில் வந்ததற்குப் பதிலாக பேருந்திலே வந்திருக்கலாம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அடுத்த பயணமாவது சிறப்பாக அமைய வேண்டும்.
Comments
Post a Comment