“கள்” துறப்போம்..!
தமிழகத்தின் ஆகப்பெறும் சாபங்களில் ஒன்று “மது”. நாளுக்கு நாள் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் , மதுக்கடைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே தான் இருக்கிறது. தமிழகமே மதுக்கடலில் கரை சேர வழி அகப்படாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. மதுவும்,அதனால் விளையும் ஆபத்துகளைப்பற்றியும் மணற்துகளளவு கூட அரசுக்கும், மதுப்பிரியர்களுக்கும் அக்கறையில்லை. தேன் உண்ணச் செல்லும் ஈ யானது தேனில் சிக்குண்டு உயிரோடு திரும்புவதில்லை, அதுபோலவே மது அருந்தும் மாக்கள் வாழ்வும். ‘ஈ’ க் கூட தேனின் சுவைக்குத்தான் உயிரை விடுகிறது, இந்த மதி கெட்ட மானுடன் எதற்க்காக இப்படி அழிகிறான் என்பது வியப்பே! நிகழ்காலத்தில் மது அருந்துவதை பெருமையாகக் கருதும் மூட இளைஞர் பட்டாளம் பெருந்திரளாக உருவாகி வருவது பெருஞ்சோகம். எதைப் பற்றியும் அக்கறையில்லாத இவர்கள் தாம் தமிழகத்தின் எதிர்காலம் எனும் போது சற்று இதயத்துடிப்பு எகிரத்தான் செய்கிறது.
தமிழ் கூரும் நல்லுலகம் தீயவை என்றும், ஐம்பெரும் பாவங்கள் என்றும் “பொய்,கொலை,கள்,களவு,காமம்” அகியவற்றை எடுத்துரைக்கிறது. அவற்றுள் மத்திமமாய் அமர்ந்து மற்ற நான்குக்கும் அஸ்திவாரம் இடுவது மதுவே! பொய் அதீத பயத்தாலும், கொலை சிங்கம் சூர்யா சொல்வது போல் ஆத்திரத்தாலும், களவானது வறுமையின் கொடுமையாலும், காமம் பருவம் தரும் கிறக்கத்தாலும், ஹார்மோன்களின் சேட்டையாலும் நிகழ்ந்துவிடலாம். ஆனால் மது அருந்துவது அப்படி யன்று. எந்த ஒரு புறத்தூண்டுதலும் இல்லாமல் அகத்தூண்டுதல் ஒன்றே நிகழ்த்திக் காட்டிவிடும்.
மற்ற தீஞ்செயல்கள் கூட்டு சேர்ந்தாலன்றி நிகழ்த்திவிடும் சாத்தியக்கூறுகள் குறைவு.ஆனால் மது அருந்த தனிமையே பெருந்துணை என்பது அனைவரும் அறிந்த வையக உண்மை. மதுப்பழக்கம் உள்ள ஒருவன் எளிதில் மற்ற தீஞ்செயல்களையும் செய்யத்துணிவான், எவ்வாறென்றால், வாடிக்கையாக மதுப்பழக்கம் வைத்திருக்கும் ஒருவன், கொஞ்சம் கொஞ்சமாக குடித்தே சொத்தை அழித்து ,கடன் வாங்கத்தலைப்படுவான்,அளவற்ற பொய் சொல்லத் தொடங்கியிருப்பான், மனைவியை , குழந்தைகளை அடிக்கத்துவங்கியிருப்பான், அதன் மூலம் கொலை கூட நிகழ வாய்ப்பிருக்கிறது, திருடவும் தொடங்கியிருப்பான், மழுங்கிய மூளை உறவு முறை தெரியா அளவு உறவு கொள்ளச்சொல்லும்.மற்றத் தீஞ்செயல்களின் பிறப்பிடம் மதுவே! குடி மனிதனை பேயாகவோ, பிசாசாகவோ, குரங்காகவோ , வேறு ஓர் விலங்காகவோ மாற்றும் வல்லமை வாய்ந்தது.உலகில் நடைபெறும் குற்றங்களில் 80 சதவிகிதத்துக்கு மேல் மது அருந்துபவர்களால் தான் நடக்கிறது, அல்லது குற்றச்செயல் புரிபவர்கள் மது அருந்தி விட்டே செயல்பட துணிகிறார்கள்.
மதுக்குடும்பத்தில் மதுபானம் தான் குடும்பத் தலைவர். கஞ்சாவும், அபினும், உடன் பிறப்புகள். காபியும், சாயாவும் அதன் வாரிசுகள். பீடி, சிகரெட், புகையிலை வகைகள் அதன் உப வாரிசுகள். இவை எல்லாமே நம் மாக்களுக்கு உற்சாகம் அளிப்பதாய் மாக்களே ஒப்புகை தந்திருப்பதால் , அவற்றால் விளையும் ரசாயன மாற்றங்களைப்பார்ப்போம். அவை எவ்வாறு சிறுக சிறுக அழிவைத்தரும் என்பதைக் காண்போம்.
எது மதுவை நோக்கி இழுக்கிறது என்று பார்த்தால் அதன் சுவையோ, மணமோ அன்று. மது இயல்பிலேயே கசப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்டது.வாடையோ அருவருப்பைத்தரும் ஒன்று. இருப்பினும் எது மதுவை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை என்று பார்த்தால், பெரும்பாலோனோர் கூறுவது, அளவிலா சக்தியும், வீரமும் கிடைக்கும் என்பது. கடும் உழைப்பைக்கோரும் வேலையை செய்யும் பலர் மது அருந்துவது,உழைக்க அதிக சக்தி தருவதாகவும், உடற் களைப்பை போக்குவதாகவும், உற்சாகமாக இருப்பதாகவும் வாக்கு தந்திருக்கிறார்கள். இதை சற்று ஆராய்ந்தால் உண்மை புலப்பட்டுவிடும்.
சாதரண மனிதனுக்கு இருக்க கூடிய நாடித்துடிப்பு, எப்போதும் ஏற்ற இரக்கம் ஏதும் இல்லாமல் ஒரே சீராக துடித்துக்கொண்டிருக்கும். அதுவே குடியர்களுக்கு குடிக்கும் வேளையில் மிக வேகமாய்த் துடிக்கும். இந்த வேகத்தையே பலரும் உற்சாகம் என்று கருதுகின்றனர். உண்மையில் இது ஒரு மாயை . ஒரு தற்காலிக தீர்வு. மேலும் இது மனிதனின் சாதாரண நாடித்துடிப்பை இயற்கைக்கு மாறாக அதீத வேகமாய் துடிக்கச் செய்து வெகு விரைவில் பரலோகம் கொண்டு சேர்த்திடும். துடிப்பின் வேகம் போதை உள்ளவரை மட்டுமே. தெளிந்த பின் அதே உற்சாகம் கிடைக்க மீண்டும் மீண்டும் மதுவானது தேவைப்படும்.. கால ஓட்டத்தில் மது இல்லாமல் செயல்படமுடியாது என்ற நிலைக்குத் தள்ளிவிடும். குடியர்கள் ரோட்டில் விழுந்து, சுய நினைவில்லாமல் , ஆடைகள் விலகி,சேர்த்து வைத்த மான, மரியாதை அத்தனையும் போனாலும் பரவாயில்லை என குடியைக் கட்டிக்கொண்டு அழுவது முற்றிலும் நகைப்புக்குரியது.
“வயிற்றுள் கள்ளிருந்து அறிவில் வெறியிருந்தால், உடல் கோவிலில் இருந்தாலும் உள்ளம் கடவுளுக்கு வெகு தூரத்தி இருக்கும்“
என்பது குருநானக் வாக்கு.
என்பது குருநானக் வாக்கு.
“ குடிப்பது அறச்செயல் அல்ல, மறச் செயல் “
என்பது புத்தன் வாக்கு.
என்பது புத்தன் வாக்கு.
நல்லோரின் வாக்குக்கேற்ப குடியைத் துறப்போம், குடியில்லா தமிழகம் செதுக்குவோம்.!


Nice
ReplyDeleteசமூக அக்கறையுடன் மிகவும் கூர்மையாக எழுதப்பட்டுள்ள சிறப்பான கட்டுரை. ஃபேஸ்புக்கில் மீமை குறைத்து இதுபோன்று எழுதினால் நன்றாக இருக்குமே!
ReplyDelete