சிலேட்டுக்குச்சி நண்பன்..!
எனக்கொரு நண்பன் இருந்தான். அவனை ஆசாரி எனப் பட்டப் பெயர் வைத்து அழைத்துக்கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்தே நண்பன் . ஆள் பார்க்க ஓமக்குச்சி கணக்காக இருப்பான். 50கி.மீ-க்கு அதிகமாக காற்று வீசினால் காணாமல் போய்விடும் அளவு வலியவன். இருவரும் ஒன்றாகத் தான் பாலர் பள்ளி வரை சென்று கொண்டிருந்தோம்.
பள்ளிக்கு தினமும் அழுதுகொண்டே வருவான். அவனது அப்பா புது ஸ்லேட்டுக்குச்சி வாங்கி வந்து கொடுத்துவிட்டுப் போகும் வரை அழுதுக் கொண்டே இருப்பான். அதன் பிறகு அவன் அழுகை கன நேரத்தில் டூத் பேஸ்ட் விளம்பர கணக்கில் பளிச் புன்னகையாக மாறும். அந்த ஏழு , எட்டு சென்டிமீட்டர் பலகுச்சி(சிலேட்டுக்குச்சி) உடையும் வரை தான் அவன் புன்னகை , அது துண்டுகளாகிவிட்டால் போதும் கத்துகிற கத்தில் ஊர் கூடிவிடும். அவன் மஞ்சப்பையில் பல கலர்களில் சிலேட்டுக்குச்சிகள் கிடைக்கும். அது ஒவ்வொன்றுக்கும் பெரிய கதை வைத்திருப்பான். ‘ இத , மாமா வாங்கித்தந்தார். இத, பெரிப்பா வாங்கித் தந்தார்... இன்ன பிற.. ’ ஒவ்வொன்றுக்கும் ஒரு பெரிய புராணத்தை வைத்திருப்பான். உடைந்த குச்சிகளை எச்சி வைத்து ஒட்டி ஒட்டி தோற்று போவான். ஆனால் வருந்தவே மாட்டான்.
நாள் செல்ல செல்ல வகுப்பில் அவன் சிலேட்டுக்குச்சிகளை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து ,டீச்சர் வாயில் முழு அடி மர ஸ்கேலால் ஒரு போடு போட்டார். அவன் தந்தை வந்து அழைத்துச் செல்லும் வரை அழுதுக் கொண்டே இருந்தான். அவன் தந்தையிடமும் இப்பழக்கம் பற்றி புகார் பத்திரம் வாசிக்கப்பட்டது. தந்தையாகப் பட்டவர் இனி இது போல் நிகழ்ந்தால் வாயில் சூடு போட்டுவிடுவேன் என மிரட்டி அழைத்துச் சென்றார். அதன் பின் அவன் வகுப்பில் சிலேட்டுக் குச்சியை வாயின் அருகே கொண்டு செல்லவே இல்லை. ஆனால் வகை வகையாக சிலேட்டுக்குச்சிகள் அவன் பைகளில் கிடைக்கும்.அவன் வொவ்வொன்றின் சுவைப் பற்றியும் எங்களிடம் பகிர்ந்துக் கொண்டு தான் இருந்தான்.” அந்த பச்ச சிலேட்டுக்குச்சி தான்டா , செம டேஸ்ட்டு..!” என சிரித்துக்கொண்டே சொல்வான். ஆனால் எங்கள் கண் முன் உண்ணவேயில்லை. வருடமும் கடந்தது. நானும் வேறு பள்ளிக்கு மாற்றலானேன்.
மீண்டும் ஆறாம் வகுப்பு வேறு பள்ளியில் சேர்க்கையில் அவனும் என்னோடு தான் சேர்ந்தான். மீண்டும் நட்பை புதுப்பித்துக்கொண்டோம். ஒருநாள் ஆசிரியர் அவன் சரியாகப் படிக்கவில்லையென அப்பாவை அழைத்து வர சொன்னார். வந்த அவனது அப்பா டீச்சருக்கு முன்பாகவே முந்திக்கொண்டு 11 வயசாகுது இன்னமும் சிலேட்டுக்குச்சி தின்னுட்டு இருக்கான் டீச்சர் என எல்லோருக்கும் முன்பாக கூறிவிட , வகுப்பே சிரிப்பில் ஆழ்ந்தது. அதன் பிறகு சில மாதங்களில் அவன் படிக்கப் பிடிக்கவில்லையென பள்ளியை விட்டே நின்று விட்டான். ஒரு வருடம் பள்ளிக்கு வராமல் மீண்டும் அடுத்த வருடம் ஆறாம் வகுப்பில் சேர்ந்தான். அதன் பிறகு அவனோடு பேசுவதும் , நெருங்கிப் பழகுவதும் குறைந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை சந்திக்கையில் , எனது விருப்பம் இல்லாமல் ஆண்டாள் அழகர் கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்ந்ததாகவும் , அரியர் அதிகமாகிவிட்டபடியால் பாதியில் நிறுத்திவிட்டதாகவும், தற்பொழுது டிப்ளமோ வேறொருக் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பதாகவும் சோகமாகக் கூறினான். கண்கள் கலங்கியிருந்தது. என்னப் பண்ண போறேன்னு தெரியலைடா? எனப் புலம்பிக் கொண்டிருந்தான். எனக்கு அவன் சிலேட்டுக்குச்சி உண்ணும் பழக்கத்தைப் பற்றி கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் நா வரவில்லை. எல்லாம் நல்லதுக்கு தான்டா என சொல்லிவிட்டு வந்தேன். உடைந்த சிலேட்டுக்குச்சிகள் போல இன்று அவனும் உடைந்து தான் போயிருக்கிறான். எதைக்கொண்டு ஒட்டப்போகிறான் என்று தான் தெரியவில்லை. ஆனால் அவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
Romba naalku apram UN blog varen.. Happy macha
ReplyDelete