பழக்குதல்...! ☺☺☺



கட்டுப்பாடற்ற சூழலில் வளர்ந்த ஒருவரை, ஒரு குறிப்பிட்ட விதிக்கு பழக்குதல் என்பது அவ்வளவு எளிதல்ல... அவர் அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். வாழ்நாளில் ஒரு பகுதியாக அதனை ஆக்கிக்கொள்ள வேண்டும். சொன்னால் கேட்பானா மானுடன். ஆறறிவின் அக்மார்க் முத்திரை வாங்கியவன் அல்லவா?

நீ யார் சொல்வது நான் யார் கேட்பது என்பது அவன் ஆழ்மனத்தின் வேராய் படர்ந்துவிட்ட ஒன்றல்லவா? சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்றால் கேட்பானா? அதற்காக கொண்டுவரப்பட்டதே அபராதங்கள். அபராதம் அளித்தும் அடங்கவில்லை என்றால் சிறை. அது தான் வழக்கம்.ஏகப்பட்ட வழிமுறைகள் இதற்கென்றே வகுக்கப்பட்டுள்ளது. கடைபிடிக்க வேண்டிய மக்களும் காதில் போட்டுக்கொள்வதோடு சரி. செயலில் சுத்தம்.ஆனால் இடையில் இந்த காவல் துறை அன்பர்கள் சட்டத்தினை பின்பற்றாதவர்களை கையாளும் முறை இருக்கிறதே... லத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் இருக்கிறதே!! அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள் என்பதை ஆழ் மனதில் அழமாக உள்வாங்கிக் கொண்டவர்கள். கை நீட்டிவிட்டே கதைக்கும் உத்தமர்கள்.☻☻ நான் பேசுவது பெரும்பான்மையை. சிறுபான்மை உத்தம காவலர்கள் இதில் அடங்க மாட்டார்கள்.

கந்து வட்டி வசூலை விட கொடுமையானது காவல் துறை வசூல்.அந்தப் பெரும்பான்மை வசூல் வள்ளல்களை விட்டுவிடுவோம்.அவர்களைப் பற்றி பேசுவது நேர விரயம். விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களை,அதற்கு பழகாதவர்களை விதிகளைப் பின்பற்ற வைக்கும் பொருட்டு ,எஞ்சிய உத்தம சிறுபான்மை காவல் துறையினர் எடுக்கும் செயல்கள் இருக்கிறதே. நிச்சயம் பாரட்டப்பட வேண்டும். இதுவும் அது போன்ற ஒன்றைப் பற்றியது தான்.
குழந்தைகளைப் பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீது விதிமுறைகளைப் பின்பற்றாததற்கு எடுத்த நடவடிக்கை ஒன்று பாராட்டப்படவேண்டியது.

♦♦♦

ஏட்டு: ஐயா, இவன் யூனிபார்ம் போடுறதில்லை. குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து செல்லும் போது அதிக வேகம்..ராஷ் டிரைவிங்......

ஆய்வாளர்: ஏன்டா வேகம்? காக்கி சட்டை எங்கடா?

ஆட்டோ ஓட்டுநர்: ஐயா நேரம் இல்லைங்க. இருந்த ஒரு சட்டையையும் துவைக்கப் போட்டுட்டேன்.  

( பொய் தான் பேசுகிறான் என்பதை யூகித்து விட்ட ஆய்வாளர்)

ஆய்வாளர்: வேற சட்டை எடுக்க வெண்டியது தான//?
பழக்குதல்...! ☺☺☺ ஐயா காசு கொஞ்சம் பிரச்சினைங்க....

ஆ: காசும் இல்லை, நேரமும் இல்லை... அப்படித்தான....

(கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு. பாக்கெட்டிலிருந்து 500 ரூபாயை எடுத்து அவன் கையில் கொடுத்து ..)

இந்தா வச்சிக்க, புது சட்டை எடுத்து ஒழுங்கா போட்டுக்க..! புரியுதா...?

ஆ.ஓ: ஐயா, வேண்டாமுங்க... நானே வாங்கிக்குறேன்...

ஆ: புடிடா... பரவாயில்லை.. காசு கிடைக்கும் போது கொடு..

ஆ.ஓ: ( காசை வாங்கிக் கொண்டு) இரண்டு நாள்ல 
திருப்பிக்கொடுத்திடுறேன்....

ஆ: என்னடா அவசரம்... பொறுமையாவே கொடு...   என்கிட்ட இல்லை. ஏட்டுக்கிட்ட.... ஏட்டையா.. இவன்கிட்ட இருந்து காசு வாங்கிக்கோங்க.. தினமும் ஒரு ரூபாயா ஐநூறு நாளைக்கு. காக்கி சட்டை போட்டுக்கிட்டு வேலைக்கு போறப்ப வந்து வழியில இருக்க இந்த ஸ்டேசன்ல கொடுத்துட்டு போவான். வாங்கிக்கோங்க...! ஆ.ஓ வை நோக்கி என்னடா சரியா?

ஆ.ஓ: ( மண்டையை சொறிஞ்சுக்கிட்டே).. சரிங்க ஐயா...!!



♦♦♦

இது தான் என்னளவில் சரியான பழக்கும் முறை. அடியாக அல்லாமல், அன்பால், அமைதியான முறையில் பழக்குதல். இனி அந்த ஓட்டுநர்.. காக்கி சட்டை அணியாமல் டிமிக்கி கொடுக்க முடியாது. கட்டாயம் அணிந்தே ஆக வேண்டும். 500 நாட்களில் அதுவே பழகிவிடும்.
மேற்குறிப்பிட்டக் காட்சி விக்ருதி என்ற மலையாளத் திரைப்படத்திலும் காட்சியாக வந்துள்ளது. வேண்டுமானால் பார்த்துக்கொள்ளுங்கள். இத்தகைய நேர்மாறான முறையில் மக்களை பழக்குவதே ஒரு அரசின் அதன் ஊழியர்களுக்கும் இருக்கும் கடமை. கையை நீட்டுவோம் பையை நிரப்புவோம், கையை ஓங்குவோம், பணிய வைப்போம் என்பது எல்லாம் சிறிதும் அழகல்ல..! என்று அறிந்துகொள்வார்களோ இந்த அதிகார வர்க்கம்.○○


Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!