எல்லாம் மனுசங்க தான்...!!
பொறியியல் படித்த அனைவருக்கும் குறிப்பாக Core Department ஆசாமிகளுக்கு சொந்த நாட்டிலே கைநிறைய சம்பாரிப்பது எட்டாக்கனி, ஐந்தாயிரத்தில் தொடங்கி.... ஐந்பதாயிரத்தை எட்டுவதற்குள் ஆயுள்
முடிந்துவிடும். வேறு வழி தெரியாமல் பணத்தின் பொருட்டு வேலைக்காக அண்டை நாடு நோக்கி
பயணப்படுபவர்களே ஏராளம்.அடியேனும் அவர்களில் ஒருவன்..!!
ஓமான் செல்லத் தாயாரான பொழுது உள்ளம் எல்லாம் நிறைந்து கிடந்தது
அச்சம் தான். காரணம் அது ஒரு இஸ்லாமிய நாடு. சிறு வயது முதலே நமது தொலைக்காட்சி மற்றும்
செய்தித்தாள்கள் கொடுத்த அளவற்ற பயம். இஸ்லாமியா நாடுகள் என்றாலே ஒரு வித அச்சம். நாம
உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருந்தா ஒரு பிரச்சனையும் வராதுன்னு எனக்கு நானே ஒரு தைரியாத்தை
வர வச்சிக்கிட்டு தான் ஓமான் வந்தேன்.
♣
வந்து இறங்கிய உடனே என்னை அழைச்சிட்டுப்போக வந்தது ஒரு ஓமானி.
என் நிறுவன PRO.
He: Hello, Sharavanakumar, how are you??
Me: yeah, fine sir…
உடம்பு முழுக்க நடுக்கம் வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு. பதிலுக்கு
நல்ல இருக்கீங்களான்ன்னு கூட கேட்கலை. வில்லா(Villa) வந்து சேரும்
வரை எதும் பேசலை. ஒரு வழியா வந்து இறங்கி தோழர் செம்மலர்ச்செல்வனைப் பார்த்த பிறகு
தான் கொஞ்சம் நிதானமானேன்.☺☺
♣
அடுத்த நாள் அலுவலகத்துல எல்லாருக்கும் அறிமுகப்படுத்தும் போது
ஓமானிங்க எல்லாம் சிரிச்ச முகத்தோட ‘Welcome To Oman’ ன்னு கூப்பிட்டது பெரிய ஆச்சரியம்.
பார்த்த எல்லாரும் ..” How are you? How is oman?” ன்னு கேட்டாங்களேத்
தவிர, தப்பித்தவறி கூட “Are you Hindu or Christian?”
ன்னு ஒரு தடவை கூட கேட்கலை, அது அவங்களுக்குத்
தேவையும் இல்லை.
♦
இதே மாதிரி முதன் முதல்ல தமிழ்நாட்டை விட்டு வட இந்தியாக்கு
வேலைக்குப் போகும் போது,அறிமுகமான எல்லாரும் “உன் சாதி என்ன?
மதம் என்ன?” ன்னுக் கேட்காம இருந்ததே இல்லை. வடக்கில்
அது ஒரு Compulsory Question. கூடவே ஹிந்தி நம்ம தேசிய பாஷை அதை
தெரிஞ்சிக்காம இருக்கிறது தப்புன்னு பாடம் வேற எடுப்பானுங்க.
♦
♥
வேலை செய்ய ஆரம்பிச்ச நாள்ல இருந்து எனக்கான பெரும்பாலான வாகன
ஓட்டிகள் ஓமானி தான். அவங்கக்கிட்டப் பேசுனப்ப எல்லாம் ஒரு தடவை கூட இந்தியா பற்றி
ஒரு தாழ்வான சொல் கூட வந்ததில்லை. நீங்க ஏன் அரபிக் கத்துக்கலைன்னு கேட்டதே கிடையாது.
இந்தியான்றது அவங்களுக்கு அழகான அன்பான நாடு. அவ்வளவு தான். ஓமான் உயர்ந்து நிக்குறதுல
இந்தியர்களோட பங்கு இருக்குன்னு மரியாதை கொடுக்குறவங்களாத்தான் இருக்காங்க. மதத்தைப்
பற்றியோ, சாப்பிடுற சாப்பாட்டைப் பற்றியோ ஒரு தடவை கூட கேட்டது கிடையாது.
இழிவாப் பேசுனது கிடையாது. இந்தியர்கள் மேல இருக்க இந்த நல்ல எண்ணத்துக்கு,இங்க இது வரை வந்து வேலை செஞ்ச அத்தனை பேரும் தான் காரணம்.
♥
இதுக்கு எதிரா இந்தியாவுல இந்த RSS, HInduththuva குரூப் அடிக்கிற லூட்டி இருக்கே. வன்முறை, கல்வீச்சுன்னு மற்ற மதத்துக் காரங்க மேல நடத்துற தாக்குதல் இருக்கே..
அதுக்கு எல்லையே இல்லாமப் போயிடுச்சு. அதுவும் ஆப் கி பார் மோடி அங்கில் ஆட்சியில இது
வரை நடந்த கலவரங்கள் வன்முறையை நினைச்சா சாதாரணர்கள் அனைவருக்கும் கோவம் வரத்தான் செய்யும்.
இது வரை பாகிஸ்தானோட மட்டும் வாலாட்டிக்கிட்டு இருந்த இந்த கும்பல் அரபுப் பெண்கள்
பற்றி ஆபாசமா எழுதப்போய் அது இங்க பெரிய விவாதப் பொருளா மாறிடுச்சு. இந்தியப் பொருள்களைப்
புறக்கணிப்போம், இந்தியர்களை வெளியேற்றுவோம் வரை வந்து நிக்குது. இப்பவும் அரபிங்க
ஹிந்துதுவ குரூப்ப மட்டும் தான் திட்டுறாங்களேத் தவிர தப்பித்தவறி கூட இங்க இருக்க
யாரு மேலையும் கை வைக்கலை.
சொந்த நாட்டுக்காரங்களுக்கு, முஸ்லிம்களுக்கு ன்னு
மட்டுன்னு இல்லாம, எல்லாருக்கும் கொரானா பரிசோதனை செஞ்சு,
ஒரே மாதிரி பார்த்துக்கொள்கிற அரபு நாடு எங்க?.. சொந்த நாட்டு மக்கள்கிட்டயே காசு வாங்கிட்டு, மதம் பார்த்து
மருத்துவம் பார்க்கும் ஹிந்த்துத்துவா எங்க? இதுங்க எல்லாம் ஹிந்துத்துவாவால்
செதுக்கி எடுத்த சுயநலவாதிங்க.... பொதுநலம்ன்றது புத்தியில கொஞ்சம் கூட இல்லை. ஒரு
பேரழிவு நடக்குறப்ப கூட அந்த மதம் வந்து இதுங்க கண்ணை மறைக்குதுன்னா...?வைத்தியம் பார்க்க வேண்டியது கொரானாவுக்கு இல்லை, இதுங்க
மதத்துக்கும் மத வெறிக்கும் தான்..!!

Comments
Post a Comment