ரொட்டி ஒழிக..!!



விவரம் தெரிந்த நாள் முதலாக இட்லியைக் காணும் பொழுதெல்லாம் வாய் தானாக ஒரு போராளியின் ஆக்ரோஷத்தோடு, சென் கூறும் நிதானத்தோடு  முணுமுணுப்பது “ இட்லி ஒழிக ..இட்லி ஒழிக...!” என்றே. அது என்னவோ தெரியவில்லை இட்லியின் வழித்தோன்றல் தோசையார் மீது பெருங்காதல் இருந்த பொழுதும், மூத்தவர் இட்லியின் மீது பெரும் வெறுப்பு.


குஷ்பூ இட்லி போமஸாக இருந்த காலத்தில் ,குஷ்பூவையும், இட்லியையும் மனதார வெறுத்தவன் அடியேன் ஒருவனாகத்தான் இருக்கும். குஷ்பூவின்  லேட்டஸ்ட் எடிசன் ஹன்சிகா மீது ஒரு தனி ஈர்ப்பு. ஆனால், குஷ்பூ பிடிக்காது.  குஷ்பூவுக்கு கோவில் கட்டிய கதையையும், இட்லிக்கு UNESCO அங்கீகாரம் கிடத்ததாக வந்த வாட்சாப் புரளியையும் சீரணிக்க முடியாமல் தவித்த நாட்கள் ஏராளம்.   


காலத்தால் மாறாத கதை ஏதும் உலகில் உண்டா.  அவ்வாறே எனது “இட்லி ஒழிக” கோஷமும்  கதையும். வீட்டை விட்டு பிரிய ஆரம்பித்த நாட்களில் பிரிவின் துயரில் திருவாளர் இட்லியார்  எனது காலைகளை கவர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். ஒன்று , இரண்டாய் துவங்கி டசனுக்கு முன்னேறி குடலுக்குள் குடி கொள்ள ஆரம்பித்துவிட்டார். நாவின் சுரப்பிகள் அத்தனையும் காணும் பொழுதெல்லாம் உமிழ் நீரை சுரந்து தள்ளுமளவுக்கு ஜொள்ளு பார்ட்டியாக மாற்றி வைத்துவிட்டார்.
இட்லியும் காரச்சட்னியும், இட்லியும் பொடியும், இட்லியும் செல்வி அத்தை வைக்கும்  சாம்பாரும், இட்லியும் அசைவக்குழம்பும் எனக்குப் பிடித்த கூட்டணிகள். இந்தக்கூட்டாளிகள் நாக்கை நகப்பாம்பு நடனம் ஆடாமல் விட்டதே இல்லை.    

முன்பு ஏன் பிடிக்கவில்லை, தற்பொழுது ஏன் பிடிக்கிறது என்பதற்கு என்னிடம் பெரிதாக விளக்கம் ஏதுமில்லை.
“இட்லியின் மகிமைகள் “ என்ற தலைப்பில்  தந்தையார் அடிக்கடி நடத்தும் சொற்பொழிவாலா?
முன்பெல்லாம் கேட்காமலே அடிக்கடி கிடைத்து, தற்பொழுது அத்திப்பூத்தாற் போல் கிடைப்பதால் வரும் பிரிவின் பின்னான நேசமா?
ஏதோவொன்று, முன்பு எந்த அளவுக்கு  வெறுத்தேனோ இன்று அதே அளவுக்கு காணும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியில் புனல் வடிக்கிறேன்.


இட்லியை வெறுத்த அளவுக்கு அம்மா சுட்டுத் தரும் சப்பாத்தியை விரும்பினேன்.  பில்ஸ்பூரி கோதுமை விளம்பரத்தில் வரும் பொம்மையையும் விரும்பினேன். கடைகளில் அந்த பொம்மை கிடைக்காதா என தேடிய நாட்களும் உண்டு.  கோதுமை மாவில் கொஞ்சம் உப்பு, கடலை எண்ணெய், சுடு நீர் சேர்த்து தோசை கரண்டியின் கைப்பிடியால்  கிளறிவிடும் பொழுது வரும் மணம்  இருக்கிறதே..! மகிழ்ச்சியின் மணம். பிசைந்து உருட்டும் வரையில் உருண்டையாக வரும் , தேய்க்கும் பொழுது கம்ப்யூட்டர் கிராபிக்சில் வரும் உருவங்கள் போல் மாறிவிடும். உருவமா முக்கியம், சுவை தான முக்கியம் என தேய்த்து தள்ளுவேன். அம்மா அதை தோசைக்கல்லில் போட்டு திருப்பிவிடும் லாவகம் இருக்கிறதே..!. இன்று வரை முயற்சி செய்து கொண்டே உள்ளேன். வந்த பாடில்லை.  அந்த சப்பாத்திக்கு அம்மா செய்யும் கொண்டைகடலை  குருமாவுக்கு, கொடைகானலை கொடையாக கொடுக்கலாம்.

அத்தகைய சப்பாத்தி சாப்பிட்டு வளர்ந்தவனுக்கு “ரொட்டி, ஜட்டி” என கண்டதையும்  சாப்பாடாகப்போட்டுக் கொலையாக கொன்றுகொண்டிருக்கிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி என் உயிரை பறிக்கும் சதி. “ கொரானா ஒழிக” என பக்தர்கள் எழுப்பிய  கோஷத்தைக்கேட்டு விழுந்து புரண்டு சிரித்ததாலோ என்னவோ?..  இன்று ரொட்டிக்கு எதிராக “ரொட்டி ஒழிக “ எனும் எனது கோஷத்தை கேட்டு வடக்கு வாயனுங்க பீடாத் தெறிக்க சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். எவன் சிரித்தால் நமக்கென்ன என நான் விடாக்கண்டனாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் “ ரொட்டி ஒழிக “ என போர்க்கொடி தூக்கிகொண்டே  இருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!