ஏழு கழுதை வயசாச்சி..!!
அது என்ன ஏழு கழுதை வயசு? கழுதையின் வாழ் நாட்களா?
ஒரு கழுதை 40 ஆண்டுகள் சராசரியாக வாழ்கிறது என்று வைத்துக் கணக்கிட்டாலும்
ஏழு கழுதை வயது 280 அண்டுகள். நம்மோடு யாரும் 280 அகவைக்காரர்
வாழ்கிறாரா? இல்லையே.. அப்படி என்றால் இதன் பொருள் தான் என்ன? நாம் தான் பார்ப்பதற்க்கும் கேட்பதற்கும் மெய்ப்பொருள் காண்பதே இல்லையே. கலப்போக்கில் நாம் பொருள் மாற்றிவிட்ட சொலவடைகள்,
பழமொழிகள், வரலாறுகள் ஏராளம். இதுவும் அதில் ஒன்று தான்.
இதன் விளக்கத்திற்கு நாம் சற்று புறப்பொருள் வெண்பாமாலை வரை
சென்று வர வேண்டும்.
அரசன் தன் வீரத்தால் போரில் வென்றிட வேண்டும் என வாழ்த்துதல்
மரபு. அரசனின் வீரத்தை புறப்பொருள் வெண்பாமாலையில் பொதுத்திணையில் உன்ன நிலை, ஏழக நிலை, கழல் நிலை
என்னும் மூன்று துறைகளில் விரிவாக கூறியிருக்கிறார்கள். மற்றதை விட்டுவிட்டு
ஏழக நிலையை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
ஏழகம் – ஆட்டுக்கிடா. ஏழக நிலை – ஆட்டுக்கிடாயினை கொண்ட நிலை.
ஏழக நிலைக்கு இரண்டு விளக்கங்கள் உண்டு.
முதல் விளக்கப்பாடல்:
ஏழகம்
ஊரினும் இன்னன் என்றவன்
தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று
தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று
( புறப்பொருள் வெணபாமாலை – கொளு- 10.5)
யானை,
குதிரை இவற்றின் மேல் அல்லாமல் ஆட்டுக்கிடாயின் மீது ஏறிப் போருக்குச் சென்றாலும்
வெற்றி வாகை சூடுவான் .அவனுடைய பகைவர்கள் அவனுடைய ஆற்றலுக்கு அஞ்சித் தாழிட்டு
இருப்பர்.இது மேற்குறிப்பிட்ட முதல் கொளுவிற்கான வெண்பாவின் விளக்கம்.
இரண்டாம் விளக்கப்பாடல்:
ஏந்துபுகழ்
உலகின் இளமை நோக்கான்
வேந்து நிற்றலும் ஏழக நிலையே
வேந்து நிற்றலும் ஏழக நிலையே
( புறப்பொருள் வெணபாமாலை
– கொளு- 10.6)
ஆட்டுக்கிடாயின் ஊரும் இளையவன் ஆயினும் அரசனாக ஆளும்
தகுதிமிக்கவன் என்று போற்றுகின்றனர் இரண்டாம் கொளுவில்.
‘ஆட்டுக்கிடாய் மேல் ஏறி விளையாடும் இளமைப்
பருவத்திலேயே அரசாட்சியை ஏற்றுத் திறம்பட ஆளும் இவனை இளையவன் என்று விலக்க
வேண்டாம்; சிங்கம் குட்டி எனினும் பெரிய யானையை அழிக்கும்
ஆற்றலுடையது’ என்பது இரண்டாம் கொளுவிற்கான வெண்பாவின் விளக்கமாகும்.
ஆட்டுக்கிடா ஏறும் இளம் வயதிலேயே ஆட்சியை சிறப்பாக நடத்திக்காட்டியவர்
என நம்முடைய வரலாற்றில் சங்க காலப்பாடல்கள் மூலம் தெரிய வருவது ஒரே ஒரு அரசர் தான். அவன் பாண்டியன் நெடுஞ்செழியன். தலையாலங்கானத்துப்
போரினால் சிறப்படைந்தவன். இளம் வயதிலே முடி சூட்டிக்கொண்டு வெற்றிவாகை சூடியவன்.
அவனை எடுத்துக்காட்டியே ஏழக நிலை வயசாச்சு, இன்னும் உருப்படக்காணோம் என முன்னோர்கள் விளிக்க, நாமோ
அதை ஏழு கழுதை வயசாச்சி எனத் திரித்து பயன்படுத்திக்கொண்டுள்ளோம். அது ஏழு கழுதை வயதல்ல.
ஏழக நிலை வயது, ஆட்டுக்கிடாயைப் பிடித்து விளையாடும் வயது. அந்த
வயதில் ஒருவன் போர்க்களம் பூண்டு வெற்றி வாகை சூடியிருக்கிறான், நீயும் தான் இருக்கிறாயே? என்று கேட்பதாகப் பொருள்.
நன்றி..!
Comments
Post a Comment