போர்ட்டா ஸ்பெக்கும் (portaspec) பொழுது போக்கும்...!!!
இந்த பூவுலகில் என் பேச்சைக் கேட்க நாதியே இல்லையா?? என்றால், இருக்கிறார்கள், பெற்ற கடமைக்காக தாய் தந்தையர் , பழகுன தோஷத்துக்காக நண்பர்கள். இவர்களை தாண்டி மைக்ரோ ஆர்கனிசம் தொடங்கி , மைக் பிடித்து பேசும் பெருசுகள் வரை , அவர்கள் என் பேச்சையும் ,நான் அவர்கள் பேச்சையும் கேட்பதில்லை என எம்பெருமானிடம் சத்தியம் செய்து வந்திருக்கிறோம். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். உயிர் உள்ள ஜீவன்கள் எக்கேடாவது கெட்டு நாசமத்து போகட்டும்.
ஆனால், இந்த
வாயில்லா ஜீவன்கள் என்னைப்படுத்தும் பாடு இருக்கிறதே. அதிலும் குறிப்பாக இந்த
எலக்ட்ரானிக்ஸ் சமாச்சாரங்கள்.. என் பொறுமையை சோதிப்பதற்காக பகவான் புரியும்
திருவிளையாடல்கள் என்றே கருதுகிறேன். என் அலைபேசியில் நீங்கள் யாருக்காவது கால்
செய்ய வேண்டும் என்றால் , ஒரு எண்ணை அழுத்தினால் போதுமானது.மீதம் இருக்கும் ஒன்பது எண்களை
அவையே குத்துமதிப்பாக டைப் செய்து கால் பண்ணி “ ஐ லவ் யூ” சொல்லிவிட்டு
கட்பண்ணிவிடும்.பிறகு அந்த நம்பருக்குரிய புண்ணியவான் மறுபடி அழைத்து சும்மா கிழி
கிழி என கிழித்து, கசக்கி பிழிந்து வாயாலே என்னை துவைத்து காய போட்டுவிடுவார்.
இப்படியாக
போய்க்கொண்டிருந்த என் வாழ்வில் வரம் வாங்கி வந்தது போர்ட்டாஸ்பெக். வந்த நாள்
முதல் என்னை பின்னங்கால் பிடறியில் பட ஓட வைக்கிறது. முதலில் இந்த போர்ட்டாஸ்பெக்
யார் எனத் தெரிந்து கொள்வோம். இந்த ஸ்டீல்(steel) துரு(rust) பிடிக்காமல் இருக்க மேலே கொடுக்கப்பட
கூடிய கெமிக்கல் கோட்டிங்(coating) ஆக பட்டது எந்த அளவில் அதன் மேல் கொடுக்கப்பட்டுள்ளது
என்பதை கண்டறியவே பயன்படுத்தப்படுகிறது. பழைய பாக்கியராஜ் படங்களில் வரும் இரும்பு
பெட்டி கணக்காக இருக்கும் அதன் விலை என்ன என்று மட்டும் கேட்டால் ,கோடியில்
சொல்வார்கள் மேலிடத்து பெரியமனுஷாள். .
![]() |
| portaspec |
அதாகப்பட்டது கோடி ரூபாய்
கொடுத்து வாங்கியும் . கோனங்கி சோனங்கி கணக்காக தான் வேலை செய்கிறது. பட்டனை
தட்டினால் மின்னல் வெட்டுவது போல் படக்கென ஒரு மினுக் மினுக்கிவிட்டு
ஹாயாகப்படுத்துக்கொள்ளும். அதன் பிறகு அதை எழவைப்பதற்க்குள் என் தாவு தீர்ந்துவிடும்.
அப்படி இப்படி அடித்து பிடித்து எழ வைத்தாலும் கஸ்டமர் கேர் இலவச சர்வீஸ் நம்பர் போல
ஏனோ தானோ வென பதில் கொடுக்கும் அதை எடுத்துக் கொண்டு சென்றால் புரொடக்ஷன் மேனேஜர்
ஹைடெசிபலில் பிளிருவார். குய்யா முய்யா என ஹிந்தியில் வசைபாட அடியேன் ஒன்னும் புரியல
போடா என தமிழில் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு மீண்டும் லேப் நோக்கி அருமை நண்பர்
போர்ட்டாஸ்பெக் தேடி செல்லுவேன். பள்ளிகொண்ட பெருமாள் போல் பவ்யமாக படுத்திருப்பார்..சுவிட்சைத்தட்டி
பரபரவென உயிர்க்கொடுத்தால் மீண்டும் நண்பராகபட்டவர் சோம்பல் முறித்துவிட்டு
மீண்டும் தூங்கிவிடுவார்.ஏழு
எட்டு முறை சுவிட்சை ஆன் ஆப் செய்து விளையாடினால் ஏதாவது ஒரு தருணத்தில் கருணை புரிவார்
நண்பர். பிறகு என்னடாவென்றால் தேர்தல் கருத்துக்கணிப்பு போல கண்ணா பின்னாவென ரிசல்ட்
கொடுப்பார். அதை வைத்து நாம் எதையும் முடிவு செய்ய முடியாது.என்னுடைய எட்டுமணி நேர
ஷிப்டில் நண்பர் 5 மணி நேரத்தை அமுக்கிவிடுவார், மிச்ச நேரத்தை ஹிந்தி கார மாமா குய்யா முய்யா
என கத்த எடுத்துக்கொள்வார்.
இப்படியாகப்பட்ட நண்பர் தன் முழு செயல்பாட்டையும் சில தினங்களுக்கு
முன்னர் நிப்பாட்டிக் கொண்டார்.அடியேன் அப்படியொரு ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தேன்.
அப்பாடா புது மிஷின் வாங்கிவிடுவார்கள் என்ற என் எண்ணத்தில் ஆசிட் ஊத்தவே இரண்டு ரத்தசோகை
வந்த வெளிறிய நிற ஜப்பான் பெருசுகள் வந்தார்கள். நண்பரை பார்ட் பார்ட்டாக கழட்டி இரண்டு
மூன்று போல்ட்களை சரி செய்து , பல ஒயர்களை வெட்டி ஒட்டி, ஆழ்ந்த நித்திரையில் இருந்த
என் நண்பரை அரை குறையாக எழுப்பி விட்டுவிட்டார்கள், நண்பர் கண்விழித்து
பார்ப்பதோடு சரி, மீண்டும் பழைய குருடி கதவ திறடி கணக்காகத் தான்
வேலை செய்கிறார்.ஆனால் அருமை நண்பரை கண் விழிக்கச்செய்ய ஜப்பான் மக்கானிக்குகள் வாங்கிய
தொகை 5 லட்சம் ரூபாய். அடி ஆத்தீ...!!

Comments
Post a Comment