பொன்னியின் செல்வன்...!!!!


எனக்குள் இவ்வளவு பொறுமையா??? நினத்தால் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.முன் கோபத்திற்க்கும் , படபடப்பிற்க்கும் பெயர் போனவன் நான்.அதனோடு என் ஞாபக சக்தி அவ்வளவு சிறந்ததெல்லாம் கிடையாது , நார்மல் ஐ.க்யூ தான்.

3-ம் தேதி ஆரம்பித்து இன்று 31-ம் தேதி பொ.செ வனை வெற்றிகரமாக படித்து முடித்திருக்கிறேன். 1500 பக்கங்கள். இடையில் ஒரு வாரம் விடுமுறை வேறு எடுத்துக்கொண்டேன்.ஒரு நளைக்கு 50 பக்கம் கட்டாயம் படிக்க வேண்டும் என எனக்கு நானே விதி வகுத்துக்கொண்டு முதன் முதலாக செயலாற்றி இருக்கிறேன் . ஏனென்றால் சோம்பித்திரிவதில் எல்லையில்லா இன்பம் காண்பவன் நான். சும்மா இருப்பதையே சுகம் எனக் கருதுபவன் நான்.

சரியாக ஒரு நாளைக்கு ஐம்பது பக்கம் படிக்காவிட்டாலும், விட்டதை அடுத்தடுத்த நாட்களில் விடாப்பிடியாக படித்திருக்கிறேன்.வழக்கமாக எந்த புத்தகத்தினை எடுத்தாலும் நடுவில் போர் அடிக்கும் போது சில பல அத்தியாயங்கள் ஸ்கிப் செய்திருக்கிறேன்.முழு முதலாக என்னை ஆட்கொண்டு ஒரு வித வெறியோடு விடாமல் படிக்க வைத்தது பொ.செ-வனாகத் தான் இருக்கும்.
ஊர் உலகமே பொ.செ- வனை பாராட்டி, புகழ்ந்து கொண்டிருந்த போதெல்லாம் அடியேனுக்கு அதன் அருமை பெருமை புரியவில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் அதை நான் வரலாற்று நாவல் என்று அறியாதது தான்.கங்கை கொண்ட சோழன் படித்ததில் இருந்து , வரலாற்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் உண்டாகிவிட்டது.அதன் பிறகு தான் பொ.செ வனை படிக்கும் அவா கொண்டேன். இருந்தாலும் அதன் 1500 பக்கங்கள் மலைப்பை ஏற்படுத்தியது. இந்த மாத துவக்கத்தில் தான் அது குறித்து வெட்கப்பட்டு நம்மால் முடியாதது எதுவும் இல்லை என அசாத்திய நம்பிக்கையை வரவைத்துக்கொண்டு படிக்க துவங்கினேன்.,

பொதுவாக அதிக கதாபத்திரங்கள் ஒரு கதையில் ,ஏன் ஒரு படத்தில் வந்தால் கூட குழம்பிப் போவேன். ஏனோ பொ.செ-வனில் அப்படி நிகழவில்லை எல்லா கதாபாத்திரங்களும் கடைசி வரை நினைவில் நின்றன.ஒரு சிறு கதாபாத்திரம் கூட விடாமல் நினைவில் நிற்பது எனக்கே வியப்பளிக்கிறது, முன்பெல்லாம் மகாபாரதம், இராமாயணம் போல் ஏன் பொ.செ வனை ஏன் நாடகமாக எடுக்கமுடியவில்லை என யோசித்துக்கொண்டிருப்பேன், இப்பொழுது தான் புரிகிறது. கண்டிப்பாக இந்த விஞ்ஞான யுகத்தில் அக்காவியத்தை அதன் போக்கிலே  எடுத்துவிடலாம் தான் , ஆனால் எப்படி இவ்வளவு கதாப்பாத்திரங்களை அவற்றின் தன்மை குன்றாமல் எடுக்க முடியும், இக்காவியம் தமிழ்., ஏன்? உலக திரைக்கதை ஆசிரியர்களுக்கும் ஒரு சவால் தான்.

அவ்வளவு எளிதில் எடுத்துவிட முடியாத படி படைத்திருப்பதே கல்கியின் சாமர்த்தியம்.வரலாறு போர் அடிக்கும் என்று யாராவது கூறினால் கட்டாயம் இதை படிக்க சொல்லுங்கள்.நம் வீர வரலாற்றை நாம் அறியாமல் இருப்பதே மூடத்தனம்.அத்தகைய மூடனாக நான் இல்லாமல் இருப்பதை எண்ணி கொஞ்சம் பெருமிதம் கொள்ளாமல் இல்லை...!!!! லிட்டில் பிட் ஆப் பெருமை தான்......

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!