ஈழமும்,பொன்னும்

பண்டைத் தமிழர் கலைகளின் பிறப்பிடமாக மட்டுமல்ல, மனித நாகரிகத்தின் தொட்டிலாகவே, ஈழம் விளங்கியது. "ஈழம்" என்ற சொல்லே, மனித நாகரிக வளர்ச்சிக்கு, அது எதனைக் கொடுத்தது, என்பதைப் பறை சாற்றிக்கொண்டு இருக்கின்றது. அந்தச் சொல் எதனைச் சொல்கின்றது என்பதே, எம்மில் பலருக்குத் தெரியாது! அதிலும், எமது தமிழ்ச் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும் தெரியாதிருப்பது, மிக மிக வேதனைப் பட வேண்டிய விடயமாகும்.

ஈழம் என்றால், பொன். அதாவது, நீரிலிருந்து எடுக்கும் பொன்னுக்குத் தமிழில், ஈழம் என்று பெயர். தமிழுக்குரிய சிறப்பெழுத்துக்களில் ஒன்றான, "ழ"கரம், இச் சொல்லோடு சேர்ந்திருந்து, பொன் போல ஒளிவிடச் செய்தும், தமிழர், ஈழம் என்பது என்னவென அறியாது இருப்பது ஏன்?
நீரிலிருந்து பொன் எடுக்க முடியுமா எனச், சிலர் நினைக்கலாம். இன்றும், ஈழத்தின் ஆற்றங்கரைகளில், உதாரணமாகப் பாலியாற்றங்கரை மணலோடு மணலாகப், பொன் துகள்கள் இழுபட்டுச் செல்வதைக் காணலாம்.

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈந்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே"
(புறம்: 9:9:11)

சங்ககாலப் பெண்பாற் புலவரான நெட்டிமையார், புறநானூற்றில், "செந்நீர்ப் பசும் பொன்" என்று சொல்வது, ஈழப் பொன்னையே. அவர், "நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" என வாழ்த்துவதால், அவரது காலத்தில், பஃறுளி ஆறு ஓடிக்கொண்டிருந்தது என்பது, தெளிவாகின்றது.

மயன் காலத்திற்குப் பின்னர், கடல் கோள்களுக்கு முன்பு, முதற் சங்க காலத்தில், இன்றைய ஈழத்திற்கு மேற்கே, தமிழகத்திற்குத் தெற்கே இருந்த நிலப் பரப்பை (குமரிக் கண்டத்தின் ஒரு பகுதியை) ஆண்ட நெடியோனால் வெட்டப்பட்டதே, பஃறுளி ஆறு.
பண்டைக் காலத்தில் கிடைத்த செந்நீர்ப் பசும் பொன்னே, ஈழம் என அழைக்கப் பட்டது. நீரிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்; ஈரத்துடன் குளிர்ச்சியும் அழகும் சேர்ந்து இருந்ததால், ஈழம் என்றனர்.

ஈரப் பொன்னுக்கு வழங்கிய பெயர், அதனைக் கொடுத்த நாட்டின் பெயராக நிலைபெற்று நிற்கின்றது. பொன்னாவெளி, பொன்னாலை, பொன்பரப்பி,
பொன் கொடு தீவு போன்ற இடங்கள், தமது பெயரில், ஈழத்தின் பழைமையைச் சொல்லாமல் சொல்வதோடு, எமது பண்டைய வரலாற்றுக் கழஞ்சியங்களாகவும் இருக்கின்றன.

நன்றி :தமிழ் மின் நூல்

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!