கருப்பையாவும் கிரஹபிரவேசமும்..



என்னடா இது புதுவருடம் தொடங்கி மாதம் ஆகப்போகிறதே..! இன்னும் ஊர் சுற்றவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்தேன் .அந்த நேரம் பார்த்து அண்ணன் கருப்பையா( அண்ணன் என்று அழைப்பதர்க்கு காரணம் சக நண்பராக இருப்பினும் 3 வருடம் சீனியர்),”டேய் சரவணா ,சும்மா ஒரு இருபது லட்சத்துல சின்னதா ஆயாவுக்காக ஒரு வீடு கட்டியிருக்கோம் ,அது குடிபோக வரியா ?? என்று கேட்க தக்க தருணம் பார்த்து காத்திருந்த நான் ok என்று தலையசைத்தேன். (குடும்பத்தோட இருக்கவே பலருக்கு வீடு இல்லாத போது ஆயாவுக்கு வீடு கட்டி இருப்பதை எண்ணி சற்று பொறாமை கொண்டேன்) 

அண்ணன் ஒரு வித்தியாச மனிதர். தனக்காக செலவு செய்வதில் தயாள உள்ளமும் பிறருக்கு என்று வரும் பொழுது கஞ்சனாக வேடமிடுவதிலும் வல்லவர். அப்பேற்பட்ட மனிதர் மனம் வந்து அழைக்கும் போது செல்லாமல் இருப்பது நல்லதல்ல என்று தோன்றியது.பயணம் முடிவானதும் எத்தனை பேர் ? எப்படி போவது ? என்ற கேள்வி எழ ,6 பேர் தான் .3 வண்டியில போயிடலாம்,70 கிலோமீட்டர்தான் .என்று அண்ணன் பதிலுரைத்தார் .எத்தனை நாள் தங்க போகிறோம்?? என்ற கேள்விக்கு எனக்கே தெரியாது என்று அண்ணன் கூற அதிலே நாம் அங்கு நீண்ட நாள் தங்க போவதில்லை என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. மனமே இல்லாமல் மனம் வந்து ஆளுக்கு 100 வீதம் சுமார் 600 ரூபாய்க்கு ஒரு சுவர்கடிகாரம் கிப்ட் ஆக வாங்கி பேக் செய்து கிளம்பினோம்.5.00 மணி அளவில் அப்பாச்சியில் அண்ணனும் சந்தோசும்,  எப்சியில் தீனாவும் மாணிக்கமும் ,ஸ்பிலண்டரில்  நானும் பாஷா பாயும் முறையே பயணமானோம்.சுமார்இரண்டரை மணி நேர இடைவிடாத பயணத்தில், (இடை இடையே வழி விசாரிக்க மற்றும் அவசரத்திற்காகவே  வண்டியை நிப்பாட்டினோம்,) 7.30 மணியளவில் திருமயம் அருகில் உள்ள கீழச்சீவல் பட்டியை அடைந்தோம்

. புது வீட்டில் நுழையும் போது அனைவரும் வாங்க என வரவேற்ற கையோடு ,இனி எல்லாரும் கருப்பையா கல்யாணத்துக்கு தான் ஒன்னுசேரப் போகிறோம் என்று 10 பேர் கொண்ட  மகளிர் அணி கூறிக்கொண்டே குலுங்கி குலுங்கி சிரிக்கத்தொடங்கியது. என்ன செய்வது என்று புரியாமல் நாங்களும்   சிரிக்கத்தொடங்கினோம். நீண்ட நேரம் வண்டி ஓட்டியதால் இடுப்பு வலியும் ,கூடவே பசியும் சேர்ந்து கொண்டது.பந்தியை எதிர்பார்த்து காத்திருந்தோம் சுமார் இருபது நிமிடகாத்திருப்பிற்கு பிறகு சாப்பிடஅழைத்தார்கள். 

அறுசுவை உணவை எதிர்பார்த்த எங்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இட்லியும் உருண்டையாக உளுத்தவடையுமே பரிமாறப்பட்டது. அதிலும் கூட அது “வடை” அல்ல, “கார பனியாரம்” ,இல்லை “போண்டா” அது என்று சண்டையிட்டுக்கொண்டே இருந்த பசிக்கு ஆளுக்கு அரை டஜன் இட்லி மற்றும் அரை டஜன் காரப்பனியாரத்தை விழுங்கி ஏப்பமிட்டோம் ..விருந்தினர் உண்ட பிறகே தாம் உண்ண வேனும் என்ற விதியை அண்ணன் கண்டுகொள்ளவேயில்லை, எங்களோடே சாப்பிட அமர்ந்துவிட்டார்.நாங்கள் மேற்க்கொண்டு யாரிடம் இட்லி கேட்பது என அறியாமல் இலையை மூடிவைத்துவிட்டு எழுந்துவிட்டோம்.சூடாக பால் அருந்தி விட்டு எங்கே படுப்பது என்று கேட்க ,அண்ணன் தன் மாமா வீட்டிற்க்கு அழைத்து சென்றார். நன்றாக உறக்கம் வரும் வேளையில் ,அண்ணன் தனக்கு முடியவில்லை ஹாஸ்பிட்டல் அழைத்து செல்ல வேண்டும் என ஹைடெசிபலில் பிளிறத் தொடங்கினார். சரியா...... போயாப் போய் உன் வண்டியை எடுத்து வா... என்று கூற அங்கேயும் ,அண்ணன் தன் அக்மார்க் வேலையைக் காட்டினார். அப்பாச்சியை மயிலேஜ் தராது என்று எடுத்து வ்ராது ஸ்பிலண்டரை எடுத்து வந்தார்.... இவ்வாறு கலவரத்தோடு இரவு கழிய காலை அல்ல அதிகாலை 7 மணிக்கு கலவரத்தோடு கிளம்ப... வீட்டுக்குள் நுழைந்ததும் நேராக சாப்பிட அனுப்பினார்கள்.

 இரவே எதிர்பார்த்து ஏமாந்த காரணத்தனால் ,எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளே நுழைந்தோம். முதலில் வைலட் கலரில் ஒன்று பரிமாறப்பட்டது அடியேன் அதை பீட்ருட் அல்வா என்று கூற,அது அல்வா அல்ல “கவுனிஅரிசி” என நண்பன் தலையில் தட்டினான். அது இனிப்பாக கொழகொழ வென அல்வா போலவே சுவையாக இருந்தது.அடுத்ததாக இட்லியும் குருமாவும் மன்னிக்கவும் குருமா அல்ல தெரக்கள் பரிமாறப்பட்டது .உடன் தக்காளித்துவையல் காரசாரமாகவும்,இடியாப்பம் சாம்பாருடனும்பரிமாறப்பட்டது. பின்னினைப்பாக வடையும் காபியும் வழங்கப்பட்டது.ஒருவாறு மன திருப்தியுடன்  காலை உணவை முடித்த பிறகு,தீனா தனக்குமுடியவில்லை உடனடியாக திருச்சி திரும்பி செல்ல வேண்டும் எனக்கூற மதிய உணவுக்குப்பிறகுசெல்லலாம் என முடிவாகியது.ஒருவாறு அரட்டை அடித்து ,ஊர்ச்சுற்றிக் கொண்டே பொழுதை ஓட்டினோம் .

மதிய உணவு அழைப்பு வந்ததும் ஆவலோடு உண்ணச் சென்றோம் .பீன்ஸ், உருளைக்கிழங்கு, கூட்டு,, ,பலாக்காய் என 4 வகையான பொறியல் பரிமாறப்பட்டது புதினா சாதம் உருளைக்கிழங்கு குருமாவுடன் பரிமாறப்பட்டது பிறகு முறையே கெட்டிகொழம்பு, ரசத்திற்கு பதிலாக தண்ணிக் கொழம்பு ,தயிர். என ஒரு வெட்டுவெட்டினேன். அடுத்ததாக சூப்பு வழங்கினார்கள் அது சாம்பாரை ஒத்த சுவையில் இருந்தது.வழக்கமாக சேமியா அல்லது ஜவ்வரிசி பாயாசம் மட்டுமே அருந்திய எனக்கு முதன் முதலாக ரவை பாயாசம் அருந்தும்வாய்ப்பு கிட்டியது.நன்கு ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு ,ஆயா கையில் கிப்டைவைத்து கொடுத்தோம் .பதிலுக்குஆயா ஒரு பிளாஸ்டிக் டப்பாவும் பத்துரூபாய் பணமும் வைத்துக் கொடுத்தார்கள்.வாங்கிக்கொண்டு ஆயாவுக்கும் மற்றவர்களுக்கும் டாட்டா பைபை சொல்லிவிட்டு திருச்சிக்கு மீண்டும் வண்டியில் திரும்பினோம்..... ஒரு அருமையான பயணம் 200 சொச்சம் கி.மீ.  பயணம் செய்திருக்கிறோம்..



பி.கு: இங்கே சில பல சம்பவங்களை குறிப்பிட விரும்பவில்லை ….   .   .

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!