இரண்டு தாத்தாக்கள்- two grandpa`s
நான் பள்ளி விடுதியில் இருந்த காலத்தில் அடிக்கடி
மீட்டிங் நடைபெறும். அறிவுரைகள் , புகார்கள், விளக்கங்கள், தேவைகள் என அனைத்தைப்பற்றியும் ஆசிரியர்கள் எங்களோடு
கலந்துரையாடுவார்கள்.
பெரும்பாலும் படித்து , படித்து
சோர்வுற்ற எங்களுக்கு உற்சாகம் ஊட்டும் விதமான கதைகள்,கருத்துக்கள் அந்நேரம் வழங்கப்படும். பிகாஸ் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை ஓய்வே இல்லாத ,
படிப்பைத்தவிர வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாத நாட்கள் அவை. எந்த வகையிலும்
நாங்கள் மனச்சோர்வு அடைந்திடக்கூடாது என்பதில் எங்கள் பள்ளி நிர்வாகம் தெளிவாக
இருந்தது.
அந்த கலந்துரையாடலில்
அடுத்தவாரம் என்ன படம் திரையிடப்படும் என்பது குறித்த குறிப்பை அளித்து உற்சாகம் ஊட்டுவார்கள்.
வாராவாரம் ஞாயிற்றுகிழமைகளில் moonlight dinner , ஒரு
புது படத்தோடு பள்ளி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்படும். அன்று மட்டும் படிப்பை
இரவு 7 மணியோடு ஏறக்கட்டிவிடுவோம். எங்களுக்கு சந்தோஷமான நாள் என்றால் வாரத்தில்
அந்த ஒரு நாள் மட்டுமே. மற்ற நாட்கள் , மார்னிங் டெஸ்ட் , ஈவ்னிங் டெஸ்ட், மதிய டெஸ்ட், ஸ்பெஷல் டெஸ்ட் , யூரின் டெஸ்ட் என வகைவகையான டெஸ்ட்
வைத்து சாகடிப்பார்கள். அன்றும் அவ்வாறு தான் மீட்டிங்
ஏற்பாடு செய்திருந்தார்கள் . சேகர் சார் தான் அன்று எங்களிடம் பேசினார்.இரண்டு
தாத்தாக்களின் தினசரி வாழ்க்கையை வைத்து எங்களுக்குள் தீ
மூட்டினார்.இனி அவரது பேச்சுமொழியிலேயே கேட்போம்.
“எனக்கு தெரிஞ்சு
ரெண்டு தாத்தா இருக்காங்கடா.. எத்தனை? ரெண்டு
தாத்தாடா..ஒருத்தர் காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு ,குளிச்சிட்டு , கஞ்சியோ , கூழோ குடிச்சிட்டு, விவசாயம் பாக்க போய்ட்டு, சாயங்காலம் வீட்டுக்கு வந்து
எல்லா சீரியலையும் பார்த்துட்டு தூங்கிடுவார்டா... ரெகுலரா இத தான்டா பண்றார்.”
“எனக்கு தெரிஞ்ச இன்னொரு தாத்தா இருக்கார்டா.அவரும்
காலைல நாலு மணிக்கு எழுந்தரிப்பார்டா, காலைக்கடன்லாம் முடிச்சுட்டு நியூஸ்பேப்பர் படிப்பார்டா.. ஒரு வரி கூட விடாம
படிப்பார்டா..அப்புறம் கொஞ்சம் உடற்பயிற்ச்சிடா..குளியல்டா, டிபன்டா, அப்புறம் கட்சி ஆளுங்களோட மீட்டிங்டா , அப்புறம் முதலமைச்சர்
வேலைடா.. இதுக்கெல்லாம் இடையில கதை எழுதுவார்டா, புக்ஸ் படிப்பார்டா, டெய்லி கொறைஞ்சது ஐம்பதுபக்கமாவது படிக்கலைனா? அவருக்கு தூக்கம் வராதுடா..கையெழுத்து போட வேண்டிய
முக்கியமான டாக்குமென்ட்ஸ் எல்லாத்தையும் படிச்சுட்டு செக் பண்ணி முடிக்கும் போது மணி
12 ஆகிடும்டா.”
முதல் தாத்தா சாதாரண மனுஷன், இரண்டாவது தாத்தா நம்ம (சீ.எம்)மு.கருணாநிதிடா, இரண்டு தாத்தாவும் ஒரே மாதிரிதான்டா உழைக்குறாங்க .ஆனால் ,எப்படி உழைக்கனும் எதுக்காக உழைக்கனும்னு
கலைஞர்
தாத்தாகிட்ட தான்டா கத்துக்கனும்.
அவர் பதவிக்கு வந்ததும் உழைப்பை விடலடா, முன்ன விட இன்னும் அதிகமா
உழைச்சுக்கிட்டு இருக்கார்டா , நீங்களும் அதே மாதிரி கரெக்டான
ரீசனுக்கு உழைக்கனும்டா சரியாடா? எனக் கேட்டுக்கொண்டு இருக்கும்
போதே , சினுங்கிய தன் அலைபேசியை எடுத்து, காதில் வைத்துக்கொண்டு எங்கள் பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட்டார்.மீட்டிங்கும்
முடிந்தது. தனிப்பட்ட முறையில் கலைஞர் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.


Comments
Post a Comment