புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!
2019 ஆம் ஆண்டு முடிவில் எழுதியது :
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் உருப்படியாக கழட்டியதாய் பெரிதாக எதுவும் ஞாபகமில்லை. சிறிது வாசித்திருக்கிறேன். ஒரு படிப்பு பாதியில் கிடக்கிறது. ஆண்டு இறுதியில் எடுத்த உடற்பயிற்சி சபதம் மட்டும் நூறு நாட்களை நெறுங்கிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் வட்டம் மிகவும் சுருங்கிவிட்டது. வாட்சாப்பில் ஒரு நெருங்கிய நட்பு வட்டம் என்ற ஒரு பிராட்காஸ்டை உருவாக்கினேன்...அடிக்கடி தொடர்பில் இருப்பவர்கள்... தூரம் கூடிய பின்னும் மறக்காமல் இருப்பவர்கள்... என வடிகட்டியதில் தேறியது வெறும் 12பேர் மட்டுமே ... ஆச்சரியப்பட்டுவிட்டேன்.... ஆயிரத்துக்கு மேல் முகநூல் நண்பர்கள் இருந்தும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனமில்லை.... மூவர் டவுசர் போடாத காலத்திலிருந்தே நண்பர்கள்.... நால்வர் கல்லூரி தோழியர்... ஒருவர் பணி நிமித்தமாய் கிடைத்த உறவு... முகநூல் பழக்கத்தால் கிடைத்த நண்பர் ஒருவர்....பள்ளி கால ஆசிரியர் ஒருவர்... பணிச்சூழலில் சிக்குண்டு தவித்த சமயத்தில் கைகொடுத்த ஒருவர்.... (இதில் என் பிறந்தநாளை நினைவு வைத்து வாழ்த்தியவர்கள் வெறும் ஆறு பேர் மட்டுமே..அவர்களுக்கு கூடுதலான அன்பும் முத்தாக்களும்)
நண்பர்களுக்கு அடுத்து உறவினர்களை ஒரு வாட்சாப் பிராட்காஸ்டில் அடக்கலாம் என நினைத்தேன்... அது சாத்தியப்படவில்லை.. எவரையும் விட மனமில்லை... நிறையோ குறையோ எல்லோரும் வேண்டுமென்றே தோன்றியது.. எனவே,அந்த விஷப்பரிட்சைக்கு விடுமுறை அளித்தேன்... மிக குறைவாக இந்த ஆண்டு முகநூலில் களமாடியிருக்கிறேன்...போலவே வாட்சாப்பிலும்...
திக்குத்தெரியாத காட்டில் நுழைந்தது போல்...துளி கூட அறிமுகம் இல்லாத ஒரு புதிய ப்ராஜக்ட்டை முடித்திருக்கிறேன். ஆயிரம் பொய் சொல்லி திருமணம் மட்டுமல்ல,ஒரு ப்ராஜக்டையும் முடிவுக்கு கொண்டுவரலாம் என உணர்ந்த வருடம். நினைத்துப்பார்த்தால் பிரமிப்பாகவும்,சிரிப்பாகவும் இருக்கிறது. கொடுத்த வலிகளும் ஏராளம். சொல்லி வைத்தாற் போல் இந்த ஆண்டும் ஊருக்கு செல்ல முடியவில்லை. எல்லா பழியும் கொரானாவின் மேல் சுமத்திவிட்டு சும்மா இருக்கலாம் தான்.. ஆனால், என் பிழையும் இருக்கிறது.... விட்டுத்தள்ளுவோம்....
2021... புது ஆண்டு பிறந்துவிட்டது... ஒரு நல்ல செயலையாவது இந்த ஆண்டு முழுமைக்கும் விடாமல் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்... என்னளவில் வழக்கத்திற்கு மாறாக எதையெல்லாம் செய்து முடிக்க முடியுமோ அவற்றை மட்டும் இந்த ஆண்டுக்கான தீர்மானமாக எடுக்க உள்ளேன்..
1. இரவு எட்டு முதல் காலை எட்டு வரை இணையமில்லா இரவு... 2. 50 புத்தகங்களுக்கு மேல் படிக்க வேண்டும்..."கடந்த ஆண்டுக்கணக்கு 25ஐக் கூட நெருங்கவில்லை..
3. நாள்தவறாமல் உடற்பயிற்சி...
4. புறங்கூறாமை... (இது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கப்போகிறது... பார்ப்போம்)
5. அரபியும்,கம்ப்யூட்டர் கீ போர்டும் கற்றுக்கொள்ள வேண்டும்...
எடுக்க ஆயிரம் தீர்மானம் உண்டு... செயல்படுத்துவது கடினமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்... இந்த ஆண்டும் ஊருக்கு செல்ல முடியாவிட்டால் அடுத்த ஆண்டு புத்தாண்டு தீர்மானத்தில் ஊருக்கு செல்ல வேண்டும் என்பது முதலிடத்தில் இருக்கும்...இரண்டு வருசம் ஆச்சு...ஊருக்குப்போக விடுங்கையா.....
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உறவுகளே...!!
Comments
Post a Comment