ஓமானிலும் விக்ரவாண்டி உணவகங்கள்..!!
பேருந்து பயணத்தில் பெரும் அசெளகரியத்தைத் தருபவர் மனிதனின் அடிப்படைத்தேவைகளில் முதலாமவரான உணவார் அவர்கள். நெடுந்தூரப்பயணங்களில் இவர் கொடுக்கும் இடைஞ்சல் சொல்லி மாளாது. டைமுக்கு சாப்பிட்டு பழகுன நமக்கு பேட் டைம் உருவாக்குபவர்.
ஊருக்குப்போறோம்ன்னு தெரிஞ்சாலே கடை சாப்பாடு ஒத்துக்காது ராசான்னு இந்தத் தாய்க்குலங்கள் எலுமிச்சையை கசக்கி, சாறெடுத்து, கடலை பருப்பை வறுத்து, கொஞ்சம் நல்லெண்ணெய் சூடு பண்ணி,கடுகைப்போட்டு வெடி வெடிச்சு விளையாடி, கருவேப்பிலையை சேர்த்து வதக்கி, பிழிஞ்ச எலுமிச்சை சாறை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கொஞ்சம் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து பச்சைவாசம் போய் எலுமிச்சை ரசத்துக்கான யுனிவர்சல் வாசம் வந்ததும், சோற்றைக்கொட்டிக் கிண்டோகிண்டுன்னுகிண்டி பொங்கலாக்கி பொட்டலம் கட்டி தந்தாலும், அதைத் தூக்கிட்டுப்போய் நிம்மதியா ஒரு இடத்துல உட்கார்ந்து சாப்பிட வாய்க்காது.
ரன்னிங்ல பொட்டலத்தை அவுத்தா மொத்த பஸ்சும் நம்மளை கட்டுச்சோற்றை அவுத்துட்டான்டா காட்டாண்டின்னு கண்ணாலயே கற்பழிப்பானுங்க. அந்த "ச்சீசீப்" பார்வையைத் தவிர்க்கவே பயணங்களில் பொட்டலத்தைத்தூக்கும் பொட்டலத்தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அதில் அடியேனும் ஒருவன். இதுல பொதுசனம் மொத்தமும் சேர்த்தி. விதிவிலக்குன்னா ஒன்னுத்துக்கும் உதவாத ஒரு பர்சண்ட் பணக்கார கோஷ்டி மட்டும் தான். அதுங்களும் சொந்தமா கார் வச்சிட்டு சுத்திவரதால, இந்த "பஸ் என்றால் என்ன?" என்ற ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளின் கேள்விக்கே பதில் தெரியாமல் முழிக்கும் கூட்டமாகிவிட்டபடியால் அவர்களைப் புறந்தள்ளிவிடலாம்.
பஸ்ஸை எடுக்கும் போதே இடையில் சாப்பாட்டுக்கு மட்டும் தான் நிற்கும் வேற எங்கேயும் சுச்சுப்போகக்கூட நிற்காது என பெரும்பாலான நடத்துனர்கள் ரூல் புக்கில் இல்லாத ரூலை வாசித்துவிடுவதால் பயணத்திற்கு கிளம்பும் முன் சூடு கிளப்பும் உணவுகளைத் தவிர்த்துவிடுவது நம் மான மரியாதைக்கு நல்லது. அவ்வாறே நீர் அருந்துவதும். டேங்க் புல்லாகிட்டா எங்கே போய் ஓப்பன் பண்ண? நம்ம உச்சாப்பாணும் ஒன் மினிட் நிப்பாட்டுங்கடான்னு பஸ் டிரைவர்கிட்ட சொன்னா, அப்ப தான் டைமிங் முக்கியம் பிகிலு, இல்லாட்டி எனக்கு கிடைக்காது ஓசி ஆம்பலேட்ன்னு அனத்துவாய்ங்க. என்னத்த சொல்ல விடியல் ஆட்சியிலயும் இது இன்னும் விடியலையாம்.
பொட்டலம் கட்டுனாதானடா உன் மானமரியாதைக்குப் பிரச்சனை, இவனுங்க நிப்பாட்டுற இடத்துல சாப்பிட்டா என்னன்னு கேட்பீங்க? அங்க தான் கரீபியன் கடல் கொள்ளையர்களோட ஒன்னுவிட்ட சொந்தம் ஹோட்டல் கொள்ளையர்கள் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பார்கள். இட்லி ஜோடி நூறு ன்னு கேள்விப்பட்டதும் பசி மறந்து போற கொடுமையெல்லாம் நடக்கும். சொல்லிவச்ச மாதிரி விலைப்பட்டியல் மாயக்கண்ணாடிப்போட்டா கூடக்கண்டுபிடிக்கமுடியாத இடத்தில், சைசில் இருக்கும். இல்லாவிட்டால் பெயருக்குப்பின்னால் சாதி இல்லாமல் பெயர் எழுதும் தமிழர்களின் பெயர் போல விலை இல்லாமல் உணவுவகைகளின் பெயர் மட்டும் இருக்கும். முன்னது சமத்துவம், பின்னது ஏமாற்றும் சாமர்த்தியம். இரண்டும் உருட்டு தான். விலைக்கு ஏற்றத்தரமாவது இருக்குமா என்றால், லெட்டர்பேட் கட்சிகளின் போராட்டம் போல் நமத்துப் போய் கிடக்கும் குவாலிட்டி.
இதையெல்லாம் இப்ப ஏன் சொல்லி கதறிட்டு இருக்கேன்னா? ஓமான் வந்தும் பேருந்து பயணத்துல சாப்பிட நிப்பாட்டுற இடத்துல போடுற சாப்பாட்டுத் தரம் சரியில்லைன்னு சொல்லத்தான். ஊர் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. மட்டன் பிரியாணி கேட்டேன், மாட்டுனான்டா சேட்டன்னு மட்டமான கறியைப் போட்டு கொண்டாந்து வச்சு, பழைய நினைவுகளைக் கிளறி கண்கலங்க வச்சிட்டானுங்க ப்ளடி பாலைவனத்தான்ஸ்...!! உங்களையெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் ஹியூமன் 25யோ 35யோ செஞ்சு பூனைக்கிட்டப்போட்டா தான்டா அடங்குவீங்க.
இங்ஙனம்,
ஒவ்வொரு நெடுந்தூர பேருந்து பயணத்திலும் துன்புறும் சக பயணி சரவண குமார்.
Comments
Post a Comment