அடிச்சித்தான் கேட்கணும்..!!

ஒரு சின்ன வேலையா அலுவலகத்தான்ஸ் நேற்று  இதுவரைக்கும் காலடிபடாத பாலைவனத்தோட ஒரு கடற்கரை நகருக்கு அனுப்பிவச்சானுங்க. பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சொன்னாலும் யாருக்கும் தெரியப்போறது இல்லை. விட்டுத்தள்ளுங்க, இது ஒரு பாலைவன ராம்நாடு. 


பெரும்பாலும் பாலைவனத்துல இருக்குற ஒரே நல்ல விஷயம் ஐந்து நட்சத்திரக் குறியீடு ஹோட்டல் அளவு இல்லாட்டியும் இரண்டு நட்சத்திரக் குறி ஹோட்டல் அளவுக்காவது குவாலிட்டியா ரூமும், சோறும் கிடைக்கிறது தான். என்னடா இம்புட்டு குவாலிட்டியா தரானுங்களே இவனுங்களுக்குக் கட்டுபடியாகுமான்னு அங்க இங்க உருட்டிப்பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, கம்பெனி நமக்கு பத்து ரூபா செலவு பண்ணா, நம்மளை வச்சி நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாரிப்பானுங்கன்றது. சரி சொந்தமா முதல் போட்டு கம்பெனி நடத்துறானுங்க பிழைத்துப்போகட்டும்ன்னு கண்டுக்காம இருக்கலாம் தான். ஆனால், இதுலயும் சில பேராசைப் பெருச்சாளிங்க இருக்கானுங்க. மருந்துக்கும் தொழிலாளிங்களைக் கண்டுக்காம அவசரகாலத்துல அரசாங்கம் ரெடி பண்ற கேம்ப் கணக்கா ரூமும், எங்கேயாவது வெள்ளம் வந்தா ஊறுகாய் பாக்கெட்டை உதவியா வழங்குற திடீர் வள்ளல் கணக்கா சோறும் போட்டு நம்மளை செஞ்சிவிடுவானுங்க. 


அப்படி ஒரு செய்கை தான் இப்ப இந்த ஏரியாவுல, வந்ததும் வராததுமா இந்த சைனாக்கார விளங்காதவனுங்கக்கிட்ட சண்டை. போர்ட்டா கேபின் எத்தனை வருஷத்துக்கு முன்னாடி ரெடி பண்ணிவச்சதுன்னு தெரியலை. வெளியில உள்ளனு போலீஸ் லத்தி அடியில அடிக்கடி மாட்டி பாதி நைஞ்சுப்போன மாதிரி ஏகப்பட்ட ஒட்டு, போர்ட்டா கேபினா? இல்லை பேண்டேஜ் கேபினா?ன்னு ஒரே டவுட். கதவுல சாவியெல்லாம் போட வேணாம், வேகமா மூச்சு விட்டாலே திறந்துக்கும். அம்புட்டு ஸ்ட்ராங்காக்கும். திறந்து உள்ள வந்தா குப்பைத்தொட்டியை எட்டிப்பார்த்த மாதிரி ஒரே குப்பை. கரப்பான் பூச்சிங்க எல்லாம் லுங்கிடேன்ஸ் ஆடிட்டு இங்கேயும், அங்கேயும் ஓடிட்டுக்கிடக்குதுங்க. மணி வேற இராத்திரி ஒன்பதுக்கு மேல ஆகிடுச்சு இதுக்கு மேல எவனைக்கூப்பிட்டு என்னத்த கேட்கன்னு ஒரு ராத்திரி அட்ஜஸ்ட் பண்ணுவோம், விடிஞ்சுப் பேசிக்கலாம்ன்னு விட்டுட்டேன். ராத்திரி எல்லாம் ஏதோ பூச்சிங்க ஓடுற மாதிரி ஒரே நசநசப்பு தூக்கமே வரலை. ஏசி வேற பாழடைஞ்ச  பாடாவதியான விண்டோ ஏசி, சத்தம் காதைப்பிளக்குது. பாத்ரூம் நம்ம ஊர் பஸ் ஸ்டாண்ட் கக்கூஸை விட மோசம். விடியட்டும் இருக்குடா உங்களுக்குக் கச்சேரின்னு நினைச்சிக்கிட்டே படுத்திருந்தேன். விடிஞ்சதும் பாத்ரூம் போய் பைப்பை திறந்தா ராகவா லாரன்ஸோட காஞ்சனா படத்துல பைப்பை திறந்தா வர மாதிரி ரத்தகலர்ல தண்ணீர் வருது, பைப் எல்லாம் துரு பிடிச்சதால வந்த பக்கவிளைவு தான்தண்ணீயோட இந்த கலருக்குக் காரணம்.


ஒன்னு விடாம எல்லாத்தையும் போட்டோ எடுத்து வாட்சாப் வழியா என்னை இங்க அனுப்பிவச்ச என் கம்பெனிகாரனுங்கக்கிட்ட அனுப்பி, ஒழுங்கு மரியாதையா இவனுங்கக்கிட்ட ரூம் மாற்றித்தர சொல்லு, இல்லாட்டி இன்னைக்கு நைட்டே கிளம்பி மஸ்கட் வந்துடுவேன் பார்த்துக்கோன்னு மிரட்டுனேன். நான் பார்த்துக்கிறேன் நீ ப்ரீயா விடுன்னு மெசேஜ் அனுப்பிட்டு, சைனாக்கார கம்பெனியோட பெருந்தலைக்கட்டு எல்லாத்துக்கும் மெயில்ல நான் அனுப்புன போட்டோவை சேர்த்து இந்த மாதிரி கேவலமான இடத்துல என் இன்ஜினியர் தங்க மாட்டான். நீ மாற்றிக்கொடு இல்லாட்டி எங்க ஆளை நாங்க திருப்பி கூப்பிட்டுக்குவோம்ன்னு மிரட்ட. ஒரே மணி நேரத்துல பத்து பேர் கொண்ட குழு வந்து நூறு நூற்றைம்பது சாரி, சாப்ன்னு கதறி எல்லாக் குப்பையையும் கிளியர் பண்ணி, மெத்தையை மாற்றி, பாத்ரூம் பைப்பை மாற்றி, ஏசியை கழட்டி ஆப்ரேஷன் பண்ணி, ரூம் ஸ்ப்ரே அடிச்சி, புது டவல், பேஸ்ட், டூத் பிரஷ், சோப், டிஷ்யூ பேப்பர், ஷாம்பூ எல்லாத்தையும் கொண்டு வந்து வச்சிட்டுப்போயிருக்கானுங்க. வாட்டர் கேன் வேற கொண்டுவந்து போட்டுட்டு போயிருக்கானுங்க. நான் இங்க வருவேன்னு மூணு நாளைக்கு முன்னாடியே தகவல் அனுப்பியும், வந்தவனை ஏனோதானோன்னு டீல் பண்ணி கடுப்பேற்றி, மெயில் அனுப்ப வச்சி, எல்லப்பயலையும் டென்ஷன் ஆக்கி.... கடைசியில ஒரே ஒரு மெயில் தான் மொத்தமா எல்லாம் மாறிக்கிடக்கு. எல்லா இடத்துலயும், எல்லார்கிட்டயும் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கனும்னு எந்த அவசியக்கூநதலும் இல்லைன்னு இந்த சம்பவம் எனக்கு ஒரு பெரிய பாடத்தை எடுத்திருக்கு. அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்னு பெருசுங்க சும்மாவா சொல்லிவச்சுதுங்க. நமக்கு ஒன்னு வேணும்னா நாம தான் இறங்கி செய்யனும்.

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!