பெண்கள் தலைமையில்...!!

பெண்களின் செளகிதாராக தன்னைக்காட்டிக்கொள்வதில் பொதுவாகவே ஆண் வர்க்கத்துக்கு ஒரு தனி ஈடுபாடு உண்டு. அதிலும் நம் 56 இன்ச் செளகிதார் எல்லோரையும் அடித்து நொறுக்கி முன்னணியில் இருக்கிறார். 

மைக் பிடித்துவிட்டால் "பெண்கள் நம் நாட்டின் கண்கள், பாரதத்தின் சக்திகள், சுடிதார் போட்ட பாரத் மாதாக்கள், ஜீன்ஸ் அணிந்த ஜான்சி ராணிக்கள், அவர்களின் சக்திக்கு அகிலத்தில் ஈடில்லை" என்பது போன்றெல்லாம் சிலிர்க்க வைக்கத் தவறியதே இல்லை நம் ஜி. 

"சாதாரணமான பெண்கள் வளர்ச்சி என்பதிலிருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்" என நம் ஜி சொல்லியிருக்கிறார்.

எதை வைத்துச் சொல்கிறார் என்று தெரியவில்லை. பெண்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வராமலே எப்படி அவர்கள் தலைமையில் நாடு முன்னேற முடியும் என்பது தெரியவில்லை.

 சாதாரணமாக பெண்கள் இணையத்தில் பாஜகவுக்கு எதிராகவோ இல்லை மாற்று அரசியலோ பேசிவிட்டால் தாங்கிக்கொள்ள முடியாத சங்பரிவாரக்கூட்டம், அது சார்ந்த இயக்கங்கள் முதலில் திருந்தட்டும். வசைபாடுவதை நிறுத்தட்டும். சொற்களால் கற்பழிப்பதை நிறுத்தட்டும்.

 ஜி அவர்களை முதலில்  திருத்தட்டும். பின்பு, வந்து ரட்சகன் நாகர்ஜுனா கணக்காக நரம்பு புடைக்க முழங்கட்டும். யார் வேண்டாம் என்றார்கள்?

ஜி உங்களுக்கு நிச்சயம் இது தெரியாமல் இருக்காது. "பெண்கள் இடஒதுக்கீடு வரைவுச்சட்டம்"  என்ற இந்திய அரசியலமைப்பின் 108ஆவது சட்டத்திருத்தம் ஒன்று நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கிறது. 2010ல் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட போதும் இன்னும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பாடில்லை. 

ஜி அவர்கள் தான் பெரும்பான்மையாக அசுர பலத்தோடு இருக்கிறார். வேறு எவர் ஆதரவும் இன்றி அவரால் நிறைவேற்றிக்காட்டமுடியும். உண்மையான பெண்களின் பாதுகாவலராக தன்னை முன்னிறுத்திக்கொள்ள அருமையான வாய்ப்பு. ஏன் இன்னும் அதை நிறைவேற்றவில்லை ஜி? எது அந்தச்சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்கிறது ஜி. இரு அவையிலும் அசுர பலத்தோடு இருக்கின்றீர்கள். வேண்டாத சட்டங்களை எல்லாம் விடிவதற்குள் நிறைவேற்றி முடிக்கின்றீர். இதையும் அப்படியே நிறைவேற்றிக்காட்டலாமே? 

பெண்களை தலைமைக்கு வர விடுங்கள் ஜி , பிறகு வந்து பெண்களின் தலைமையிலானவளர்ச்சி என சொற்பொழிவாற்றலாம். எல்லோரும் சில்லறைகளை சிதற விடுவார்கள். நான் உட்பட!

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!