இரத்த தானம்- பர்ஸ்ட் அட்டம்ப்ட்(first attempt) ......




      காலையிலே அப்பா பிளட் டொனேட்(blood donate) பண்றியாடா எனக்கேட்டார். ஏன்பா திடீர்னு கேக்குறீங்க??’ இல்லடா தளபதி பிறந்த நாள்னு (மு.க.ஸ்டாலின் ) தமிழ்நாடு  பூரா இரத்ததான முகாம் நடத்துராங்க நான் கொடுக்கபோறேன் நீயும் வந்தா நல்லாயிருக்கும் , அடிக்கடி பிளட் டொனேட் செஞ்சா உடம்புக்கு நல்லது என அழைத்தார். நான் யோசித்தேன்,சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு எங்கள் கல்லூரி வளாகத்தில் போக்குவரத்துத்துறை இரத்தான முகாம் நடத்தியது,அப்போது மாலை கிளம்பும் போது பாதி இரத்தத்தை கீழே கொட்டிவிட்டு தான் சென்றார்கள்.அதே போல் வீணாக்கிவிட மாட்டங்களாப்பா?? எனக் கேட்டேன். இல்லடா, எல்லா இரத்தத்தையும் பர்பெக்ட்டா பிளட்பேங்க்ல சேர்த்திவடுவாங்க என நம்பிக்கை தெரிவித்து அழைத்துச் சென்றார்.
     ஜெயங்கொண்டத்தில் ஒரு திருமண மண்டபத்தில் இரத்த தான முகாம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே நுழைவுவாயில் முழுவதும் கரை வேட்டிக்காரர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். அப்பா அவர்களிடம் சிறிது நேரம் ஏதோ  பேசிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார். எல்லாம் பெருசுங்களா இருக்கே,கண்டிப்பா சுகர் பி.பி எல்லாம் இருக்கும், இதுங்க எப்படி பிளட் கொடுக்கப்போகுது என யோசித்துக் கொண்டிருந்தேன். உள்ளே நுழைந்த எனக்கு ஆச்சரியம் இரத்தம் கொடுக்க வந்த அனைவரும் என் வயதை ஒத்தவர்கள், முப்பதை தாண்டாதவர்கள் ,கல்லூரிக்கு சென்று கொண்டிருப்பவர்கள் என்பதை பார்க்கும் போதே தெளிவாகத் தெரிந்தது. சொல்லி வைத்தாற்போல் இந்த பெருசுங்க எல்லாம் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு எஸ் ஆகிவிட்டார்கள்.
     அடியேன் இதுவரை இரத்தம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தும் கொடுத்ததே கிடையாது. எல்லாம் பயம் தான். இதற்கு முன் இரத்தம் கொடுத்தவர்கள் ”கையை இரண்டு நாளைக்கு தூக்க முடியாதுடா,மயக்கம் வரும் ,தலைவலிக்கும்,பிக்ஸ் வரும்”என ஏகத்துக்கும் பயம் காட்டினார்கள் என்பதை விட பில்ட்அப் கொடுத்தார்கள்.இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை கொடுத்து பார்த்து விடலாம் என களம் இறங்கினேன். முதலில் டாக்டர் பரிசோதித்தார்,” இதற்கு முன் இரத்தம்  கொடுத்திருக்கிறீர்களா? மயக்கம் வந்துருக்கா? காலைல சாப்பிட்டிங்களா? “ எனக் கேட்டுவிட்டு பி.பி செக் செய்தார்,எல்லாம் நார்மல் இரத்தம் கொடுக்கலாம் என பச்சைக் கொடி காட்டினார். அடுத்ததாக நீடிலில் குத்தி இரத்த வகை என்ன என பரிசோதித்தனர் , நான் பி பாசிட்டிவ் எனத் தெரிந்தும்  அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா ? என அறிந்து கொள்ள   மௌனம் சாதித்தேன்.சரியாகவே தெரிவித்தார்கள்.அடுத்ததாக ஊர், பெயர்,வயது,பிறந்ததேதி உள்ளிட்டவற்றை எழுதிக்கொண்டு எனக்கான இரத்தம் கொடுக்கும் பையைக் கொடுத்தார்கள்,எடுத்துக்கொண்டு பெட் தேடுவதே பெரும் பாடாக இருந்தது. இரத்தம் கொடுக்கும் சிலரைவிட இரத்தம் கொடுத்துவிட்டு மயக்கம் ஆகியவர்களே அதிக பெட்டை ஆக்கிரமித்திருந்தார்கள்.
அடியேனுக்கு பெட் கிடைப்பதே பெரும் பாடாகிவிட்டது.இடம் கிடைத்து பிளட் டொனேட் செய்யும் பொழுது பெரும் தியாகியாய்(கொஞ்சம் ஓவர் தான்) பீல் பண்ணினேன். கட்டெரும்பு கடிப்பது போல் ஒரு சுறுக் நரம்பை தேடிக்கண்டுபிடித்து சொறுகிவிட்டார்கள்.கையில் ஒரு பந்தைக்கொடுத்து அமுக்கி கொண்டே இருக்க சொன்னார்கள்.ஒரு பத்து நிமிடத்தில் 350 எம்.எல் ,இரத்தம் எடுக்கப்பட்டாயிற்று,அடியேன் மயக்கம் வரும் என எதிர்பார்த்தேன்.அதெல்லாம் ஒன்றும் நிகழவில்லை,நார்மலாகத்தான் இருந்தேன். வழக்கமாக இரத்தம் கொடுப்பவர்களுக்கு ஜூஸ் எல்லாம் வழங்குவதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.சற்று தாமதமாக ஒரு 250 ml frooti வழங்கினார்கள், உடன் ஒரு சன்பீஸ்ட் 5 ரூபாய் பிஸ்கட்டும் வழங்கப்பட்டது.சிறிது நேர ஓய்விற்கு பிறகு ,மணியைப் பார்த்தேன் ஏறக்குறைய 12.30 பசித்தது,வீட்டுக்கு போகலாம் என அப்பாவை அழைத்தேன், இருடா பிரியாணித் தருவாங்க இங்கேயே சாப்பிட்டுக் போகலாம் எனக்கூற அமைதியாய் பிரியாணியை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்,அரைமணி நேரகாத்திருப்புக்கு பிறகு பிரியாணி  வழங்கப்பட்டது, வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்,பிரியாணி சற்று சுவை கம்மி தான், அடியேனுக்கு காரம் வேறு அலர்ஜி......

Comments

Popular posts from this blog

உல்பா..!!!

திருநல்லூர்-ஸ்ரீ்கல்யாணசுந்தரேஸ்வரரும் - கலர் கலர் வண்ணமும்.......

அசைவர்கள் வெறுக்கும் தமிழ்ப்புத்தாண்டு!