என் ஜன்னலுக்கு வெளியே...!!
ஒரு முதுமொழி உண்டு” ஊர் சுற்றி அலைபவன் ஒரு தொழிலும் அறியான்”, ஆனால் அவனுக்கு உலக ஞானம் இயல்பாகவே இருக்கும்.அது ஊர் சுற்றி அலைபவர்களுக்கு மட்டுமே தெரியும் புரியும்.உலகை எட்டிப்பார்க்காமல் உலக்கை ஒரே இடத்தில் குத்திக்கொண்டிருப்பதைப் போல, ஒரே இடத்தில் புழங்கி கொண்டிருப்போமானால், ஒரே வேலையை செய்து கொண்டிருப்போமானால் நாம் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
உலகப் ப்ரக்ஞையே இல்லாமல் , ஒரே இடத்தில் ஊர்ந்து உளுத்துப்போவாதற்கு பிறவாமலே இருக்கலாம். முதலில் ஜன்னலைத் திறங்கள், உலகம் எவ்வளவு அழகாக இயங்கிகொண்டிருக்கிறது என்று பாருங்கள். உதாரணத்திற்கு என் ஜன்னலுக்கு வெளியே என்ன நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறேன். படியுங்கள்.
ஜன்னலைத்திறக்கும் முன்னே ஒரு மழலையின் அழு குரலும், அதன் தாயின் ஹிந்தி சமாதான உரையும் காதுகளில் விழுகிறது.. பைப்பில் சொட்டிக்கொண்டிருக்கும் தண்ணீரை பெயர் தெரியாத குருவிக்கூட்டம் அருந்திக்கொண்டிருக்கிறது. பருத்த வண்டு ஒன்று ரீங்காரமிட்டுக்கொண்டு ஜன்னலின் வழியே உட்புகுகிறது. பக்கத்து வீட்டுக்காரர் வேலைக்குக் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பும் போது அவரது 2வயது குழந்தை கட்டியணைத்து முத்தமிட்டு அழுகையோடு பை பை சொல்கிறது, யாரோ அசைவம் சமைக்கிறார்கள்... .. சொல்லிக்கொண்டே போகலாம்.
உலகம் அதன் பாதையில் அழகாக இயங்கிகொண்டிருக்கிறது. எட்டிப்பார்ப்பவர்களுக்கு மட்டுமே அதன் மீது படியும் மாசு தெரியும்,அதை துடைத்துக்கொள்ள முயன்று முடியாமல் மௌனம் காக்கும் அதன் இயலாமை புரியும், மனிதர்களால் முடக்கப்படுவதும் , அதன் புனித கரங்கள் மனித செயல்பாடுகளால் கறை படந்து கிடப்பதும் தெரியும்.மாலன் அவர்கள் ஜன்னலை திறந்து அழகிய உலகின் மீது படிந்த சில கறைகளை தன் எழுத்தின் மூலம் சரிபடுத்த முயன்றிருக்கிறார்.தன் தீர்மானமான விமர்சனத்தை கட்டுரையாக வடித்திருக்கிறார். இவை புதிய தலைமுறையில் தொடர்ந்து வெளியான கட்டுரைகளின் தொகுப்பே..
புத்தகம்:என் ஜன்னலுக்கு வெளியே
ஆசிரியர்: மாலன்
வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம்
Comments
Post a Comment