பார்த்திபன் கனவு...!!!
பார்த்திபன் கனவு என்ற தலைப்பை பார்த்ததும், ஸ்ரீ்காந்த் ,சினேகா நடிப்பில் வெளியான திரைப்படமும் அதில் இடம் பெற்ற ஆலங்குயில்,கூவும் ரயில் ஆரிராரோ பாடலும் தான் நினைவுக்கு வந்தது.அதன் பின் இந்த நாவலை தொடுவதற்கு முன் இது ஒரு ஆகச்சிறந்த காதல் காவியமாகத்தான் இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.அது முற்றும் பொய்யாகவில்லை.ஆண், பெண் காதலுக்கு பதிலாக மன்னன் ஒருவன் தன் சுதந்திர நாட்டைப்பற்றி எண்ணிய கனவும் அதற்காக அவன் புரிந்த வீர தீர செயல்களும் அழகாய், படிக்க சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.
இந்த சோழ நாட்டைப் பற்றி தான் எத்தனை எத்தனை கதைகள். ஒன்றாவது படிக்கும் போது சலிப்பு தட்ட வேண்டுமே அது தான் இல்லை. ஒவ்வொரு அரசனைப் பற்றி படிக்கும் போதும் மயிர் கூச்சம் இயல்பாய் ஏற்படுகிறது. பல்லவ ஆட்சி காலத்தில் மங்கிய சோழ நாட்டின் புகழை மீண்டும் மீட்டெடுக்க 300 ஆண்டுகள் ஆகிற்று.ஆனால் அதற்கான வேரை பார்த்திப மகாராஜா அன்றே விதைத்துவிட்டு தான் சென்றார்.அவர் பல்லவ மன்னனை எதிர்த்து உயிர் துறந்ததும் , அதன் பின் இளவரசன் விக்கிரமன் பல்லவரை எதிர்த்து கலகம் செய்து நாடு கடத்தப்பட்டதும்,எதிர்பாராமல் பல்லவ இளவரசி சோழ இளவரசன் மேல் காதல் கொண்டதும், சென்பகத்தீவில் விக்கிரமன் தனி அரசனாய் முடி சூடி தன்னாட்சி புரிந்ததும், பிறகு மாறுவேடம் பூண்டு தாயைப் பார்க்க சோழ நாடு திரும்பியதும், புலிகேசியின் தம்பி நீலகேசி கலகம் புரிந்து குட்டையை குழப்பியதும், யுவான் சுவாங் வாணிபம் செய்ய வந்ததுமாய் ஒரு நூற்றாண்டு வரலாற்றை ஒரு நாவலின் வாயிலாய் அறிந்து கொள்ள முடிந்தது கொடுப்பினை தான்.
புத்தகம்: பார்த்திபன்கனவு
ஆசிரியர்:கல்கி
Comments
Post a Comment